அமீர் கானின் ‘டங்கல்’ பற்றி இருவேறு பார்வைகள்!

டங்கல் அட்டகாசம்.

முதல் பாதி பெரியாரியம். இரண்டாம் பாதி லகான். வருட இறுதியில் வெளியாகி, இந்த வருடத்தின் மிக பெரும் வெற்றியாக மாற இருக்கிறது.

அமீர் கான் அற்புதமான நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், கதையில் சொல்ல வந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, தன் பாத்திரத்தை ஒதுக்கி, மற்றவருக்கு இடம் கொடுக்கவெல்லாம் நடிகர் என்பதை தாண்டிய சமூக புரிதலும் பொறுப்புணர்ச்சியும் வேண்டும். Denzel Washington போல தன் subtle நடிப்பில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். ‘எப்படி அடிச்சேன்னு அடிச்சி காட்டு’ என சொன்னதும், மகள்கள் பையனை புரட்டி போடுவதை பார்த்து அமீர் அடையும் பூரிப்பு நம்மையும் பற்றி விடுகிறது. இந்துத்துவா கும்பலுக்கு தேவைப்படும் தேசிய கீதத்தையும், ஒரு பாரத் மாதா கீ ஜே-வையும் படத்தில் வைத்து, அவர்கள் விதிகளுக்கு உட்பட்டும் தான் இந்தியன் என மறுபடியும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

என்னதான் சொல்லுங்கள்… எவ்வளவு தாமதமாக நீங்கள் பெண்ணியம் பேசினாலும் எங்கள் பெரியார்தான் உங்களுக்கு தேவைப்படுகிறார். பெண்ணுக்கு தகுதி குறைவு முடி என்பதால் அதை அமீர் வெட்ட வைக்கும்போதும், ஆண்கள் விளையாட்டுக்கு ஆணுக்கு நிகராக தயாராக, அரைக்கால் சட்டை போடும்போதும், ‘பொண்ணுப்பா கொஞ்சம் பாத்து சண்டை போடு’ என நடுவர் மல்யுத்த போட்டியாளனிடம் சொன்னவுடன் ‘பொண்ணுனெல்லாம் பார்க்காதே’ என அமீர் மகள் சொல்லும்போதும் தெரிவது எங்கள் தாடிக் கிழவன் தான்.

கடைசியில் செய்த உத்தியை நான் முன்னமே நினைத்து விரும்பியிருந்தேன். ‘நீ வாங்கும் கோல்ட் மெடல் பெண்களை அடிமைகளாக நினைப்பவர்களுக்கு கொடுக்கும் அடி’ என இறுதி ஆட்டத்துக்கு அனுப்புவார் அமீர். அவ்வளவு பெண்ணியம் பேசிய பிறகு, ஒரு அப்பா என்னும் ஆணின் உதவியுடன் ஜெயித்ததாக தானே கதை முடியும் என்ற தயக்கம் எனக்கு இருந்தது. பாசம் என்பதெல்லாம் இருந்தாலுமே, அது அப்படித்தானே பொதுப்புத்தியால் புரிந்து கொள்ளப்படும்.

ஆனால், அந்த இறுதி ரவுண்டில் அமீர் கான் போட்டி நடக்கும் இடத்தில் இருக்க மாட்டார். கதையின்படி அமீரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டுவதாக காட்சி அமைந்திருக்கும். எல்லா ரவுண்ட்களிலும் அப்பாவின் அறிவுரைகளை கேட்டு ஆடிக் கொண்டிருந்த மகள், இறுதி ரவுண்டில் தானே சுயமாக சிந்தித்து ஆடி, வெற்றி வாகை சூட்டுவார். இது இயக்குநரின் யோசனையா, அமீரின் யோசனையா என தெரியவில்லை. அதாவது படத்தின் க்ளைமேக்ஸில் படத்தின் நாயகனாக அவதானிக்கப்படும் அமீரின் பங்கு முற்றிலும் இருக்காது. ஆனால், தெளிவான சிந்தனையில் விளைந்த முடிவு. எனவே, இருவருக்கும் சபாஷ்.

மொத்தத்தில் Dangal எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.

இந்த வருடம் நிறைய நல்ல இந்தி படங்கள் வெளிவந்திருக்கின்றன. பெரியார் நிறைய இந்தி பேசி இருக்கிறார். மகிழ்ச்சி!

RAJASANGEETHAN JOHN

                                              # # # # # #

                                              மாற்று பார்வை

 டங்கல்…

சாதாரண ஸ்போர்ட்ஸ் மூவி. அப்படி ஒண்ணும் பயங்கர சுவாரஸ்யமாலாம் இல்ல..

இதே டெம்ப்ளேட்ல தான் எல்லா ஸ்போர்ட்ஸ் படமும் வருது…

உண்மைக் கதை அப்படிதான் இருக்கும்ன்னு சொல்வாங்க.. மேட்டர் என்னன்னா, உண்மைக் கதை இப்படி இருக்காது. இவங்க வணிக ரீதி வெற்றிக்கான FORMULA தான் இந்த மாதிரி உணர்ச்சி பொங்கல்…

ஊர் மக்கள் முதல்ல சிரிச்சு கேவலமா பேசி, அப்பறம் வியந்து, தோத்து போகற மாதிரி வந்து, திடீர்ன்னு ஜெயிச்சு… உஸ்ஸ்ஸ்ஸ் முடியல…

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாய் ஒரு கரப்டட் அதிகாரி. அப்படியாக இதுல ஒரு கோச்…

 அமீர் கான் டெடிகேசனுக்காக பார்க்கலாம். அவர் தயாரிப்பு வேற.

 ரெண்டு நிமிஷம் வர்ற காட்சிக்கு ஏத்துன உடம்பு… ப்பா.. வாட்டே மேன்…

 அது சரி, எலி ஏன் அம்மணமா ஓடப்போகுது…. போட்ட காசு இந்த ‘ஆ…’ வியப்புலயாச்சும் வரணும்ல…

 மற்றபடிக்கு திடீர் தேசபக்தில கூவுறவங்க… அப்படி ஓரமா உக்காந்து கூவிட்டு வாங்க, போங்க…

சம்பந்தமே இல்லாத ஒரு கருத்து:- 3Idiots படத்துல அப்பா ஆசைப்படி இஞ்சினியரிங் படித்த மாதவன போட்டோகிராபிக்கு போக சொன்னார்.. இதுல அப்பா ஆசையை நிறைவேற்ற சொல்றார்.. ஸோ, படத்த பார்த்துட்டு யாரும் ஏய் ஊய்ன்னு ஷோல்டர ஏத்தாதிங்க…  A MOVIE IS A MOVIE.

MEENAMMA KAYAL

 

 

 

Read previous post:
0a1a
நமது திரைப்படங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள்!

LGBT (Lesbian, Gay, Bisexual and Transgender) எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு நம் படங்களில் சரியான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்று வித்யா தன் பதிவில்  வருத்தப்பட்டு  இருந்தார்.

Close