நமது திரைப்படங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள்!

LGBT (Lesbian, Gay, Bisexual and Transgender) எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு நம் படங்களில் சரியான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்று வித்யா தன் பதிவில்  வருத்தப்பட்டு  இருந்தார்.

பிராந்திய மொழிப் படங்கள் விஷயம் வேறு. ஆனால் ஹிந்தியில் ரொம்ப நாள் முன்பே துவங்கி விட்டிருக்கிறது. இதற்கு ரொம்பவும் உதவியவர் கரண் ஜோகர். இவரே ஓரினச் சேர்க்கையாளரா என்கிற வதந்தி ஒரு பக்கம் இருக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், சொல்லப் போனால் அந்த வதந்தியையே மூலதனமாக வைத்து தன் படங்களில் துணிச்சலாக ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி சொன்னவர். அவர் எடுத்த தோஸ்தானா படம் கொஞ்சம் தமாஷாக கொண்டு போனாலும், ஹோமோசெக்ஷுவல் பற்றிய மக்களின் இறுக்கம் தளர நன்றாகவே உதவியது. அதன் பின்னர் நிறைய பாலிவுட் படங்களில் gay மற்றும் lesbian பாத்திரங்கள் சகஜமாக உலாவத் துவங்கி விட்டனர். சமீபத்தில் வெளிவந்த டியர் ஜிந்தகி படத்தில் கூட நாயகியின் தோழர்களில் ஒருவன் gay ஆக இருப்பான்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், மிந்த்ராவின் ஒரு விளம்பரத்தில், சேர்ந்து வாழும் இரு லெஸ்பியன் பெண்களில் ஒருத்தியின் பெற்றோர் அவர்களைப் பார்க்க வருவார்கள். அந்த விளம்பரத்தில் அவள் தமிழ்ப் பெண்ணாக, குறிப்பாக ஒரு சமூகத்துப் பெண்ணாக, காட்டப்பட்டிருப்பாள் என்பது தனி சமாச்சாரம். (இதைப் பற்றி அந்த விளம்பரம் வெளியானபோதே பதிவிட்டிருந்தேன்.)

மேற்கு சமூகங்களில் ஓரினச் சேர்க்கை பற்றிய சிந்தனை மாறுவதற்கு டிவி மற்றும் படங்கள் பெரும் பங்கு ஆற்றி உள்ளன. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் படங்களில், மற்றும் குறிப்பாக, டிவி சீரியல்களில் gay அல்லது lesbian பாத்திரங்கள் நிறைய வர ஆரம்பிக்க ‘இவர்கள் நம்மை மாதிரி சக மனிதர்கள்தானே!’ என்கிற தெளிவு கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு பரவ ஆரம்பித்தது. மக்கள் சிந்தனை மாற ஆரம்பித்ததும், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றுவது அந்த ஊர் தலைவர்களுக்கு சுலபமாக ஆகி விட்டது. இப்போது இங்கிலாந்து உள்பட முக்கால்வாசி மேற்கு ஐரோப்பியாவில் இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் சட்டப்படி கல்யாணமே செய்து கொள்ளலாம். இந்த மனமாற்றம் பொழுதுபோக்கு ஊடகங்களால்தான் சாத்தியமாயிற்று என்றால் மிகையில்லை.

இதேபோல இந்தியாவிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இப்போதே ஹிந்திப்பட பாதிப்பு உள்ள படித்த மக்கள் நிறைய பேர் பெருமளவுக்கு இவற்றை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள்.

ஆனால், பிராந்திய மொழிகள் இன்னமும் இந்த விஷயத்தில் பின்தங்கிதான் இருக்கின்றன. தமிழில் கோவாவில் மட்டுமே ஓரளவுக்கு இதனை காட்ட முயன்றார்கள். மற்றபடி நாம் அதற்கு ரெடியாக இல்லை.

என்னைக் கேட்டால் முதலில் தமிழ்ப் படங்களில் பெண்களை லூசுப் பெண்ணாக அல்லது குடும்ப குத்துவிளக்காக  எல்லாம் காட்டாமல், மரியாதையாக சித்தரிக்க முயற்சிக்கலாம். LGBTயை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

SRIDHAR SUBRAMANIAM