“ஊழலில் மூழ்கியுள்ள சந்திரபாபு நாயுடுவை ‘ஹீரோ’ என்பதா?”: கமலை விளாசிய ரோஜா!

பார்ப்பனிய மதவெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் ஆட்சிசுகம் அனுபவித்து வரும் கட்சி தெலுங்கு தேசம். இக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை, தனது ‘ஹீரோ’ என்கிற அளவுக்கு புகழ்ந்து பேசி மெய் சிலிர்த்தார் நடிகர் கமல்ஹாசன். மதுரையில் நடந்த தனது கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கமல் பேசிய் இந்த பேச்சுக்கு, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் ரோஜா கூறியிருப்பதாவது:

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் பேசுகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘நான் விரும்பும் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர்’ என்றும், ‘அவர் என் ஹீரோ’ என்றும் பேசியதாக பத்திரிகைகளில் படித்து மிகவும் வருந்தினேன்.

ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளதாக கூறிக்கொள்ளும் கமல், மூச்சுத்திணறும் அளவுக்கு ஆந்திராவில் ஊழல் ஆட்சியில் மூழ்கியுள்ள சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 23 எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கான பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய சந்திரபாபு நாயுடு, அவர்களை ராஜினாமா செய்யாமலேயே தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, அதில் 4 பேருக்கு மந்திரி பதவி வழங்கி உள்ளார்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட சந்திரபாபு நாயுடுவை, கமல் புகழ்ந்து இருப்பதைப் பார்த்து ஆந்திராவில் உள்ள அவரது ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர்.

‘பாரதிய ஜனதா போன்ற மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அது போன்ற தவறு செய்ய மாட்டேன்’ என இப்தார் விருந்து ஒன்றில் கூறிய சந்திரபாபு நாயுடு, 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதை தெரிந்துகொண்டு அவருடன் கைகோர்த்து தேர்தலில் போட்டியிட்டதுடன் ஆட்சியிலும் பங்கேற்று வருகிறார்.

கடந்த தேர்தலில் 600 வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு இதுவரை ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர். ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்துள்ளதாக கூறிக்கொள்ளும் கமல், சந்திரபாபு நாயுடுவை பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு ரோஜா கூறியுள்ளார்.