அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியுடன் புகைப்படம் எடுக்க அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடக்கிறது. இதில் முதல் கட்டமாக மாவட்டம்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, நகர நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் ரசிகர்கள் எப்போது மன்றத்தில் இணைந்தார்கள், என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட முழு விவரங்களும் உள்ளன. முறையான விவரங்களை அளித்துள்ள ரசிகர்கள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகியான சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

0