விஜய் டிவி நிகழ்ச்சியில் உண்மையை மறைத்த இளையராஜா!

விஜய் டி.வி-யின் ‘காஃபி வித் டிடி’- நிகழ்ச்சியில் இளையராஜா. இன்று மாலை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில்…

“பண்ணைபுரத்தில் இருந்து நானும் என் சகோதரர்களும் சென்னைக்குப் போவதென்று முடிவு செய்து கிளம்பினோம். ஆனால், அந்த முடிவில் திடீர் மாற்றம். மதுரையில் கொஞ்ச நாள் தங்கலாம் என்று முடிவு செய்தோம். மதுரையில் மேல மாசி வீதியில் மண்டையன் ஆசாரி சந்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குப் போனோம். மாயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் தலைவரின் வீடு தான் கட்சி அலுவலகம். அந்த வீட்டில் ஒரு அறையில் தங்கிக்கொள்கிறோம் என்று அவரிடம் கேட்டோம். கம்யூனிஸ்ட் தலைவர்கள், தொழிலாளர்களைப் பற்றி, உழைப்பாளி மக்களை பற்றியெல்லாம் பேசுவார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பார் என்றெல்லாம் பேசுவார்கள் (லேசான கோபம் தெரிகிறது). அந்த அறையை யாரோ ஒருவருக்கு வாடகைக்கு விடப் போகிறார், அதை இந்த சின்னப்பசங்களுக்குக் கொடுக்கலாமே என்று அவர் விட்டிருக்கலாம். அவர், நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர். அவரோ, நான் கட்சியிடம் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால் நாங்கள் சென்னைக்குக் கிளம்பிவிட்டோம்” என்று சொன்னார்.

ஆனால்…

விகடன் தீபாவளி மலருக்காக (2014), தோழர் ஐ.மா.பா-விடம் அண்ணன் சௌபா எடுத்த பேட்டியில்… பாவலர் வரதராஜன் சகோதரர்கள் தன்னை வந்து சந்தித்தது பற்றியும், அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளைச் சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்தது பற்றியும் ஐ.மா.பா சொல்லியிருக்கிறார்.

தோழர். ஐ.மா.பா. இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, சிவகங்கை மாவட்டம், நைனாங்குளத்தில் உள்ள எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார். அப்போது இளையராஜா பற்றி கேட்டபோது, விகடன் தீபாவளி மலரில் சொல்லியிருந்த விவரங்களை எங்களிடமும் பகிர்ந்து கொண்டார். அவற்றை வைத்துப் பார்க்கும்போது, இளையராஜா சில உண்மைகளை மறைத்துவிட்டு அரைகுறையாக சொல்லியிருக்கிறார் என்றே தெரிகிறது.

– ஏஆர். பழனியப்பன்