காபி வித் காதல் – விமர்சனம்

நடிப்பு: ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ஆர்யா (சிறப்பு தோற்றம்), மாளவிகா சர்மா, அம்ரிதா அய்யர், ரைஸா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி மற்றும் பலர்

இயக்கம்: சுந்தர் சி

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஈ.கிருஷ்ணசாமி

தயாரிப்பு: குஷ்பு சுந்தர், ஏ.சி.சண்முகம், ஏ.சி.எஸ்.அருண்குமார்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது

சுந்தர் சி.யின் படங்களில் அழுத்தமான கதை இல்லை என்றொரு விமர்சனம் உண்டு. இதனால் கோபம் கொண்டதாலோ, என்னவோ “கதையாடா கேக்குறீங்க… கதை” என்று, இடியாப்பச் சிக்கல்கள் நிறைந்த – தலைமுடியை பிய்த்துக்கொள்ளக் கூடிய – குழப்பான ஒரு கதையை கையில் எடுத்து, அதை மிகவும் நேர்த்தியான திரைக்கதை மூலமும், வண்ணமயமான மேக்கிங் மூலமும் ‘காபி வித் காதல்’ என்ற சுவாரஸ்யமான படமாகக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.

ஊட்டியில் வசிக்கும் பெரிய செல்வந்தர் பிரதாப் போத்தன். அவரது மூத்த மகன் ஸ்ரீகாந்த். இசைக் கலைஞர். இவரது மனைவி சம்யுக்தா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. என்றாலும், மனைவி சம்யுக்தா மீது நாட்டமில்லாமல், நவ நாகரிக அல்ட்ரா மாடர்ன் பெண்கள் மீது மோகம் கொண்டவராக இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் ஒரு மதுவிருந்தில் சந்திக்கும் ரைஸா வில்சனுடன் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ என்ற விதத்தில் காம களியாட்டத்தில் ஈடுபடுகிறார்.

ஸ்ரீகாந்தின் மூத்த தம்பி ஜீவா. பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவரும் ஐஸ்வர்யா தத்தாவும் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ்-இன் ரிலேசன்ஷிப்’பில் இருக்கிறார்கள். என்றாலும், ஐஸ்வர்யா தத்தா வேறொரு ஆணுடன் காம உறவில் இருப்பது தெரிய வந்து பிரச்சனையாகி பிரேக்-அப் ஆகிறது. தனிமரம் ஆகும் ஜீவா, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் மாளவிகா சர்மாவை காதலிக்கிறார். ஆனால் ஜீவாவின் பெற்றோரோ, அவருக்கு ஸ்ரீகாந்துடன் கள்ள உறவில் இருந்த ரைஸா வில்சனை மணம் முடித்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஸ்ரீகாந்த் இந்த திருமணத்தை தடுக்க முயலுகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரின் இளைய தம்பியான ஜெய்யை அவரது பால்ய சினேகிதியான அமிர்தா அய்யர் ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் ஜெய் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பவரும், தன் அண்ணன் ஜீவாவின் காதலியுமான மாளவிகா சர்மாவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். இது தெரிந்து விலகும் அம்ரிதா அய்யருக்கும் வேறொருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது.

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகியோரின் சகோதரியான டி.டி. என்ற திவ்யதர்ஷினி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரது கணவர் ஆர்யாவோ பைலட்டாக வானில் பறந்துகொண்டே இருக்கிறார்.

இப்படி தத்தமது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களுடைய குடும்பத்தில் காதல் மற்றும் திருமண ஏற்பாட்டால்  மிகப்பெரிய குழப்பமும் சிக்கலும் ஏற்படுத்துகிறது. அதில் இருந்து இந்த குடும்பத்தார் மீண்டு வந்தார்களா? என்பதை சிரிக்கச் சிரிக்க கலகலப்பாக சொல்லுகிறது படத்தின் மீதிக்கதை.

சுந்தர் சி.யின் படங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருமே நடிக்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்கு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் என்பது மரபு. அந்த மரபு இந்த படத்திலும் மீறப்படாமல் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இப்படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான இசையமைப்பு, ஈ.கிருஷ்ணசாமியின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

‘காபி வித் காதல்’ – வாங்க… சிரிச்சுட்டுப் போங்க…!