சாதிய ஆணவக்கொலை தமிழினத்துக்கே தலைகுனிவு: சீமான் சீற்றம்!

“உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

13.03.2016 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது. பார்த்தாலே பதற வைக்கும் அந்த பச்சைப் படுகொலை மனித இனம் விலங்கின் குணத்தில் இருந்து விடுதலை பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இதயப்பூர்வமாக நேசித்து, காதல் திருமணம் செய்த இளம் தம்பதிகள் சங்கர்-கவுசல்யா ஆகியோரை நட்டநடுச் சாலையில்  சாதி வெறியர்கள் வெறிநாய் போல கொத்திக் குதறி பொறியாளர் சங்கரை கொலை செய்து போடுவதை மனிதனான எவனாலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

சாதி முரண்களை அழித்து தமிழின இளையோர் நாம் தமிழர் என்கிற இன ஓர்மைக்குள் திரளத் தொடங்குகிற இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்திருக்கிற இந்த சாதி ஆணவப்படுகொலை எந்த காரணத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடும் நிகழ்வு.
50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொடர்ந்து பரவும் சாதீய உணர்ச்சிகளின் பேயாட்டமும், சீரழிந்த சட்டஒழுங்கு நிலையும் நமது விழிகளில் அப்பட்டமாக உறுத்துகின்றன. இதுதான் 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிமுறையின் சிறப்பு.

ஈழத்தில் நம் உறவுகள் சிங்கள பேரினவாத கரங்களில் சிக்குண்டு படுகொலை செய்யப்பட்டபோது எழாத உணர்ச்சிக் கொந்தளிப்பு, நமது தங்கை இசைப்பிரியா உள்ளீட்ட நம் சகோதரிகள் சிங்கள காடையர்களால் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டப்போது எழும்பாத உணர்ச்சி வேகம், நம் மண்ணையே சுடுகாடாக்கும் கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டபோது திரளாத கோப உணர்ச்சி, நமது விவசாய நிலங்களை பாலைவனமாக்க வந்த மீத்தேன் திட்டத்திற்கு எதிராக எழும்பாத உணர்ச்சி அலை, நம்மை பிளவுபடுத்தி வீழ்த்தி இருக்கும் சாதிக்காக எழும்பி ஒரு உயிரையும் பலி வாங்குகிறதென்றால்.. எத்தகைய மோசமான சூழலில் நாமெல்லாம் வாழ்கிறோம் என அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட தமிழர் என்கிற தேசிய இனம் சாதிய வேறுபாடுகளால் இன்றளவும் வீழ்ச்சியடைந்து கிடப்பது மாபெரும் கொடுமையாக இருக்கிறது. சாதியை காக்க காதலைக் கொல்ல ஆணவ சாதிக் கரங்கள் எழுகின்றன. இனத்தின் ஓர்மைக்கு எதிராக இருக்கும் சாதீய முரண்களை வேரோடு வெட்டிச் சாய்க்க தமிழின இளையோர் தங்கள் உளவியலில் புகுத்தப்பட்டிருக்கிற சாதீய உணர்ச்சியை சாகடிக்க வேண்டுமென இந்த சமயத்தில் நான் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த படுகொலை நிகழ்வில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என தமிழக அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.