புரோக்கன் ஸ்கிரிப்ட் – விமர்சனம்

நடிப்பு: ரியோ ராஜ், ஜோ ஜியோ வன்னி சிங், ஜெய்னீஷ், குணாளன், நபிஷா ஜுலாலுதின், மூணிலா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜோ ஜியோ வன்னி சிங்

ஒளிப்பதிவு: சலீம் பிலால் ஜிதேஷ்

படத்தொகுப்பு: ராம் மணிகண்டன்

இசை: பிரவீன் விஸ்வா மாலிக்

தயாரிப்பு: ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

திரைப்படம் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி தன்னை மோசம் செய்து ஏமாற்றிய இயக்குனரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை சென்னையில் தேடிக்கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் சைக்கோ (ஜோ ஜியோ வன்னி சிங். படத்தில் இவர் பெயரே சைக்கோ தான்). அவர் உடல் சோர்வுக்காக மெடிக்கல் ஷாப் ஒன்றில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுவிட்டு, படுக்கையில் படுக்கிறார்.

அடுத்து, அவர் சிங்கப்பூரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுகிறார். அங்கு மனித உடலுறுப்புகளைத் திருடி விற்கும் 2 மருத்துவர்களும், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் போலீஸ் அதிகாரி அமரன் (ஜெய்னீஷ்) தீவிரம் காட்டுகிறார்.

 மறுபுறம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடிக்கொண்டிருக்கும் தம்பிதுரைக்கு (ரியோ ராஜ்), அவருடைய அக்கா டிடி (நபிஷா ஜுலாலுதின்) ஆபத்தான ரியல் கேம் ஒன்றை விளையாடுவற்கான யோசனையைச் சொல்கிறார். அதன்படி, “நம் இருவரில் யார், ஆள் இல்லாத வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை எவரிடமும் சிக்காமல் எடுத்து வருகிறோமோ, அவர் தான் வெற்றியாளர்” என்று சொல்கிறார். இருவரும் வெவ்வேறு வீடுகளுக்குள் நுழைகிறார்கள். அப்படி ஒரு பங்களாவுக்குள் நுழைந்த தம்பிதுரை, பல கொலைகள் செய்திருப்பதாகக் கூறும் நிஜ சைக்கோவான ஒரு வக்கீலிடம் (குணாளன்) சிக்கிக்கொள்கிறார்.

தயாரிப்பாளர் சைக்கோ தன்னை ஏமாற்றிய இயக்குனரை தேடிக் கண்டுபிடித்து பழி வாங்கினாரா? மருத்துவர்களையும், போலீஸ் இன்ஸ்பெக்டரையும் கொன்ற கொலையாளியை போலீஸ் அதிகாரி அமரன் கண்டுபிடித்து கைது செய்தாரா? நிஜ சைக்கோவிடம் சிக்கிக்கொண்ட தம்பிதுரை அங்கிருந்து தப்பித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத பதிலை அளிக்கிறது ‘புரோக்கன் ஸ்கிரிப்ட்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.

கதையின் மையப்புள்ளியான தயாரிப்பாளர் சைக்கோ என்ற கதாபாத்திரத்தில் ஜோ ஜியோ வன்னி சிங் நடித்திருக்கிறார். தோற்றத்தில் வெள்ளைக்காரர் போல் இருந்தாலும், போரடிக்காதபடி தன்னுடைய கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக முன்னே எடுத்துச் சென்றுள்ளார். சீரியஸாக நடிக்கும் அதேவேளை, அவ்வப்போது எம்ஜிஆரின் மேனரிசம் காட்டி சிரிக்கவும் வைக்கிறார்.

சின்னத்திரையில் பிரபலமாகி, தற்போது பெரிய திரையில் நாயக நடிகராக வளர்ந்துவரும்  ரியோ ராஜ், இந்த படத்தில் தம்பிதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். பங்களாவுக்குள்  திருடனாக நுழைவது, அங்கிருக்கும் வக்கீலை கட்டிப்போட்டு மிரட்டுவது, சில நிமிடங்களில்  வ்க்கீல் ஒரு நிஜ சைக்கோ என்று தெரிந்து அவரிடம் சிக்கிக்கொண்டு நடுங்குவது என காமெடியாக திறம்பட நடித்திருக்கிறார்..

டிடி என்ற கதாபாத்திரத்தில் தம்பிதுரையின் அக்காவாகவும், சிங்கப்பூரில் டிராவல் ஏஜென்ஸியில் பணிபுரிபவராகவும் வரும் நபிஷா ஜுலாலுதின், இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரி அமரனாக வரும் ஜெய்னீஷ், கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பீரமாக நடித்திருக்கிறார். நிஜ சைக்கோவாக நடித்திருக்கும் குணாளன், தன்னிடம் மாட்டிக்கொண்ட ரியோ ராஜை பாடாய் படுத்தி, நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார்.

தயாரிப்பாளர் சைகோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோ ஜியோ வன்னி சிங், இப்படத்தை இயக்கியிருக்கிறார். மிகச் சிறிய பட்ஜெட்டில் எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக படத்தை நகர்த்த முடியுமோ அந்த அளவுக்கு நகர்த்திச் சென்றுள்ளார். படம் சீரியஸாக சென்று கொண்டிருந்தாலும், ஆங்காங்கே காமெடியை அள்ளித் தெளிக்க அவர் தவறவில்லை. உதாரணமாக, சிங்கப்பூர் ரஜினி சீக்வன்ஸ், போலீஸ் நிலையத்தில் விரியும் ‘நாளை நமதே’ சீக்வன்ஸ் போன்றவை காமெடி சரவெடி!

சலீம் பிலால் ஜித்தேஷ் ஒளிப்பதிவும், பிரவீன் விஸ்வா மாலிக் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கின்றன.

‘புரோக்கன் ஸ்கிரிப்ட்’ – எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ரசிக்கலாம்!