பூமிகா – விமர்சனம்

பொதுவாக பேய் படங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காசு கொடுத்து ‘எங்கே என்னை பயமுறுத்து பார்க்கலாம்’ என்கிற சாகசம்தான் என ஓர் எண்ணம் உண்டு. அதையும் தாண்டி எனக்கு பிடித்த படம் ‘Ring’. காரணம் அதில் பேய்க்கென ஒரு சுவாரஸ்யமான கதையும் அதை தெரிந்து கொள்வதற்கென ஒரு Treasure hunt பாணி திரைக்கதையும் இருந்தது. இரண்டையும் இடறின்றி வெளிப்படுத்திய craft-ம் இருந்தது.

ஒரு புதிய படம் பார்க்கும் வாய்ப்பு காலையில் வாய்த்தது. ட்ரெய்லரிலேயே பேய் படத்துக்கான அம்சங்கள் வெளிப்பட்டன. படத்துக்கான டைட்லிங் மட்டும் இது புது ரக பேய் படமாக இருக்கலாம் என உணர்த்தியது. படத்தின் பெயர் பூமிகா.

‘பூமி’கா!

பெயருக்கான டிசைனில் செடி, கொடி, காடு.

அப்போ அதானே ஜெஸ்ஸி?

சுற்றுச்சூழல் பற்றி பல படங்கள் சர்வதேச அரங்கில் வெளியாகி இருக்கின்றன. Day after tomorrow தொடங்கி, Snow Piercer மற்றும் The Tiger: An Old Hunter’s Tale வரை அறிவியலாகவும் அரசியலாகவும் பல படங்கள் சூழலியல் பேசி இருக்கின்றன. மலையாளத்தில் கூட வெளி வந்திருக்கின்றன. தமிழ்ச்சூழலில் மட்டும் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்த குறைவானவற்றிலும் நாயக அரசியல் நெடி அதிகம். அதில் பேயும் கலந்தால் என்ன ஆகும்?

‘படப்படிப்பு’டன்தான் படம் பார்த்தோம். முதல் பாதியில் வழக்கமான ‘காட்டுக்குள் கட்டடம்’, ‘அதை வாங்க வரும் அப்பாவிகள்’ முதலியவற்றை கொண்டு பேய்க்கான களம் நிர்மாணிக்கப்பட்டது. முதல் ‘அட’ போட வைத்தது செல்போனில் பேய் என்கிற சுவாரஸ்யம்தான். ‘செல்போன்ல பேய் வருமா சார்’ என கேட்டால், ‘முதலில் பேய் வருமா சார்’ என்பதாகதான் பதில் கேள்வி இருக்க முடியும். பேய் படத்தில் முதல் பலியே லாஜிக்தான்.

‘பேய் படத்துக்கு லாஜிக் இருக்காது’ என்கிற விஷயத்தை கொண்டு முற்றிலும் புதியதோர் கோணத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார் இயக்குநர். அது நமக்கு பிடித்த கோணமாகவும் இருக்கிறது. Rabbit hole-க்குள் Alice விழுவது போல் விரும்பி விழுகிறோம்.

முதல் பாதியில் Pavel Navageethan ஓர் எளியனாக பிரமாதப்படுத்துகிறார். இரண்டாம் பாதியில் தோழர் Prasanna Balachandran அநாயசமாக நடித்து நம்மருகே வந்து விடுகிறார். கூடவே அவரின் மகள் கதாபாத்திரத்தையும் மனதுக்குள் இறக்கி விட்டு விடுகிறார்.

காடழித்ததால் கிளம்பிய வைரஸ்ஸின் மூன்றாம் அலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நம் மனங்களின் அந்தரங்க பகுதிகளுக்குள், வெளிக்காட்ட விரும்பாத ஒரு குற்றவுணர்வு பதுங்கி இருக்கிறது. காலங்காலமாக சுற்றுச்சூழலை சுரண்டும் அரசுகளையும் பொருளாதார கொள்கைகளையும் வாழ்க்கைமுறைகளையும் அனுமதித்த குற்றவுணர்வு அது.

நம் மனங்களின் அந்த பகுதிகளிலிருந்துதான் பூமிகா கிளம்பி வருகிறாள். இப்பூவுலகின் உருவகமாக அவளை நாம் பாவிப்பது இயல்பாகவே நேர்கிறது.

முதன்முறையாக ஒரு பேயை பார்த்து பயப்படாமல், ரசிக்கத் தொடங்குகிறோம். ‘அட இது பேய்தானே’ என இடது மூளை குத்தினாலும் நம் குற்றவுணர்வின் ஆழத்துக்கு இறங்கி பூமிகா வெற்றி பெறுகிறாள்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான தேவையற்ற முடிச்சாக இப்படம் சிலருக்கு தோன்றலாம். ஆனாலும் அந்த முடிச்சை நாம் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் இன்று இருக்கிறோம்.

இயக்குநரின் சமயோசிதம் நிறைய இடங்களில் கைகொடுத்திருந்தது. ஜேம்ஸ் லவ்லாக்கின் Gaia Hypothesis பேசுவது இன்றைய கூகுள் தலைமுறைக்கு மிகவும் எளிதுதான். ‘எங்க தாத்தன் கரெக்டாதான் சொன்னாரு’ எனப் பேசி கான்க்ரீட்டில் மரம் விட்ட வேரை பெருமையுடன் தடவிப் பார்க்கும் உழைப்பாளியுடன் லவ்லாக்கின் கருதுகோளை இணைக்கும்போது இயக்குநரின் புரிதல் மிளிர்கிறது.

மனிதன் என பொத்தாம் பொதுவாக குறை கூறாமல் சுற்றுச்சூழலை அழிக்க விரும்பும் மனிதனுக்கு இருக்கும் பொருளாதார நிர்பந்தம், அதை இயக்கும் வணிகம் மற்றும் அரசியல் என திரைக்கதையை குலைக்காத அளவுக்கு மெல்லிய இழை கொண்டு சமூக யதார்த்தம் பேசியிருப்பதும் நேர்த்தி.

இயக்குநர் R Rathindran Prasad நம்பிக்கை அளிக்கிறார். சினிமாவின் வணிக சட்டகத்துக்கள் சமூகத்துக்கு தேவையான விஷயத்தை முன்வைத்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் முன்னும் பின்னும் வெட்டியிருக்கலாம் என மட்டும் தோன்றியது.

பூமிகா, மொத்த மானுடத்தின் குற்றவுணர்வு!

Rajasangeethan

 

Read previous post:
0a1a
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு!

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழ்நாட்டில்  கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 4 மாதங்களுக்கு பின் இன்று (23-08-2021)  மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இரு தினங்களுக்கு

Close