உலக வங்கியின் உமியும் தமிழக மக்களின் அரிசியும்!

2020-ம் ஆண்டின் ஜூன் 29ம் தேதி இந்தியா முழுவதும் கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது உலக வங்கியில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டின் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வீட்டு வசதி உருவாக்கி தர வேண்டும் என்பதுதான் ஒப்பந்தத்தின் நோக்கமாக குறிக்கப்படுகிறது.

கண்கள் கலங்குகிறதா? இன்னும் இருக்கிறது.

ஒப்பந்தம் இரண்டு திட்டங்களுக்காக போடப்பட்டது. தமிழ்நாட்டு வீட்டு வசதித் துறையை வலுப்படுத்த 20 கோடி டாலர் நிதியும் தமிழ்நாட்டு வீட்டு வசதி மற்றும் வசிப்பிட மேம்பாட்டுக்கு 5 கோடி டாலர் நிதியும் ஒப்பந்தத்தில் ஒதுக்கப்பட்டது. அடிப்படையில் தமிழ்நாட்டின் வீட்டு வசதித் துறைக்கான கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் விதிகள் முதலியவற்றை வலுப்படுத்தும் திட்டங்களாக இவை சொல்லப்பட்டது.

எப்படி வலுப்படுத்துமாம்?

முதல் திட்டம், வீட்டு வசதி அளிப்பதில் தற்போது அரசு ஈடுபட்டிருக்கும் நடவடிக்கைகளை ஆதரித்துக் கொண்டே அதன் பங்கை மெல்ல விலக்கி அனுமதி அளிக்கும் வேலையோடு அதை நிறுத்தும் முனைப்பை கொண்டது. தனியார் துறைக்கு இருக்கும் விதிகளை தளர்த்தி, வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வீட்டு வசதி அளிப்பதற்கென ஊக்கத் தொகைகளை தனியாருக்கு அத்திட்டம் அளிக்கும். இரண்டாம் திட்டம் இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி வீட்டு வசதி அளிக்கும் முறைகளை இன்னும் சிறப்பாக மாற்றுமென சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது அரசை மிக்சர் சாப்பிட சொல்லி விட்டு தனியாரிடம் வீட்டுவசதித் துறையை ஒப்படைக்கும். யார் அந்த தனியார் என்பதில்தான் இறுதி ட்விஸ்ட் வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று தரப்பு கையெழுத்திட்டது. ஒன்றிய நிதி அமைச்சகம், தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி. முறையே சமீர் குமார், ஹிதேஷ் குமார் மக்வானா மற்றும் சுமிலா குல்யானி. தமிழ்நாட்டு அரசு பிரதிநிதியின் பெயர் வாயில் நுழையக் கூட மறுக்கிறதல்லவா? அப்படிதான் நமக்கு சம்பந்தமில்லாதோர் தெளிவாக அத்தகைய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சரி, இந்த ஒப்பந்தத்தை பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான செயலாளர், “பாதுகாப்பான, விலை குறைவான வீட்டு வசதியை கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம்,” என்கிறார். அடுத்து அவர் சொல்வதுதான் முக்கியமான விஷயம். “பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ஒதுக்கீடுடன் உலக வங்கியின் இரு திட்டங்களும் சேர்கையில் மாநிலத்தில் இருக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதி கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.”

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா ஏன் இதற்குள் வந்தது? தமிழ்நாட்டுக்கென வீட்டு வசதி வாரியம் இருக்கிறதே. யார் இதை அனுமதித்தது?

இரண்டாம் திட்டத்தை விளக்குகிறார்கள்:

‘இரண்டாம் திட்டம், வணிக மற்றும் அதிக வருமானம் ஈட்டும் மேம்பாடு திட்டங்களுக்கு மானியங்கள் அளிக்கும். இவற்றில் கிடைக்கும் வருமானம், வீட்டு வசதி நடவடிக்கைகளின் குறைந்த வருமானத்தை ஈடு கட்டும். விளைவாக, வீட்டு வசதி என்பது முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் தரக் கூடிய விஷயமாக மாறும்.’

ஆகவே பெருநிறுவனங்களுக்கென வீட்டு வசதித் துறை தாரை வார்க்கப்படும்.

‘இத்திட்டம் மாநிலத்தின் முக்கியமான அரசு அமைப்புகளான குடிசை மாற்று வாரியம், சென்னை மெட்ரோ வளர்ச்சி ஆணையம், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை அமைப்பு முதலியவற்றையும் வலுப்படுத்தும்.’

‘உலக வங்கி உதவும் திட்டம்’ என்பதை ‘உலக வங்கி அழிக்க விரும்பும் திட்டம்’ என புரிந்து கொள்ளுங்கள். உலக அளவில் இதுதான் நிலை. அதையும் அவர்களே அங்கு சுற்றி இங்கு சுற்றி இறுதியில் சொல்லியும் விடுகிறார்கள்.

“வளர்ந்து வரும் வசிப்பிடத் தேவைகளை பொதுத் துறை மட்டும் சரி செய்துவிட முடியாது என்பதற்கான சர்வதேச அனுபவம் இருக்கிறது. குறிப்பாக வேகமாக நகரமயமாகும் நாடுகளில் சாத்தியமே இல்லை,” என்கிறார் உலக வங்கியை சேர்ந்தவர். “ஒழுங்குமுறை மற்றும் சந்தை ஊக்கத்தொகைகளை வரையறுத்து, வீட்டு வசதித்துறைக்கு தனியார் துறையை ஈர்ப்பதில் வேண்டுமானால் பொதுத் துறை முக்கிய பங்காற்றலாம்,” என்றும் கூறுகிறார்.

அதாவது அரசையும் வீட்டு வசதித் துறையையும் தனியாருக்கு டோக்கன் கொடுக்கும் வேலையை மட்டும் செய்யச் சொல்கிறது உலக வங்கி.

ஆனால் தனியார்மயத்தில் உலக வங்கிக்கான ஆர்வம் என்ன?

கையில் பணமில்லை என உலக வங்கியிடம் கேட்கிறோம். அதை கொடுக்க சில கண்டிஷன்களை அது போடுகிறது. எல்லா கண்டிஷன்களுக்கும் அடிப்படையாக ஒன்றுதான் இருக்கும். அரசை கைகழுவச் செய்வதும் தனியார்மயமும்!

இறுதி ட்விஸ்ட் என்ன தெரியுமா?

தனியார் நிறுவனங்களை அனுப்புவதும் உலக வங்கியாகதான் இருக்கும். எனவே ஒரு பக்கம் கடன் கொடுத்து அந்த பணத்தை மறுபக்கத்தில் தனியார் பெருநிறுவனம் கொண்டு உலக வங்கி எடுத்துக் கொள்ளும். வாங்கியதற்கான வட்டி மட்டும் நம் தலையில்.

உலக வங்கியின் இந்த ஆட்டத்தை உலகின் எந்த மூலையாக இருந்தாலும் எதிர்க்கக் கூடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான். பிற கட்சிகள் யாவும் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டு இயங்குபவையே. முதலாளித்துவம் விரும்பும் நகர வடிவமைப்புக்குள் அழுக்கானவர்களை அது விரும்புவதில்லை. உழைப்பவர்கள் கேட்கும் உரிமையை மறுத்து தூக்கி எறிய விரும்புகிறது.

நகரங்களை முதலீட்டுக்கான பொலிவு மிளிர்கிற பளபளப்புகளை கொண்டதாக மாற்ற விரும்புகிறது. அதற்கு ஏதுவாக நம் ஊர் பார்ப்பனியமும் உதவுகிறது.

இந்த ஆட்டத்துக்குள்தான் கேபி பார்க் பிரச்சினையும் வருகிறது.

இந்த ஆட்டத்தை வளர்ச்சி என்றும் நகர வடிவமைப்பு என்றும் அழகான வார்த்தைகளை கொண்டு நம் தலைகளில் திணிப்பார்கள். அதில் இருக்கும் பிரச்சினையை பேசத் தொடங்கும்போது ஊழல் என்பார்கள். ஊழல் மட்டுமே நாட்டின் பிரதான பிரச்சினை என பேசும் என்ஜிஓக்களிடம் மீடியாக்கள் ஓடி மைக் நீட்டும்.

உண்மை என்னவெனில் நகரத்தில் நமக்கு இடமில்லை. நமக்கான வீட்டு வசதிக்கென சில கோடிகளை மட்டும் கூட கொடுக்க அரசு தயாரில்லை. நம் தலைகளில் ஒன்றரை லட்ச பொருளாதாரச் சுமையை ஏற்றி இங்கிருந்து நம்மை விரட்டவே பார்க்கின்றன.

உலக வங்கியின் வார்த்தைகளின்படி பார்த்தால் இத்திட்டங்கள் குடிசை மாற்று வாரியம் மட்டுமென இன்றி CMDA முதலிய பிற அரசு நிறுவனங்களையும் பதம் பார்த்திருக்கிறது.

சென்னை நகரத்துக்கான நாளை நேற்று கொண்டாடி முடித்திருக்கிறோம். இந்த நகரம் யாருக்கானது என்ற கேள்வியுடன் இனி அரசுகளை எதிர்கொள்வோம்.

Rajasangeethan

 

Read previous post:
0a1a
பூமிகா – விமர்சனம்

பொதுவாக பேய் படங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காசு கொடுத்து 'எங்கே என்னை பயமுறுத்து பார்க்கலாம்' என்கிற சாகசம்தான் என ஓர் எண்ணம் உண்டு. அதையும் தாண்டி

Close