நட்ராஜ் நாயகனாக நடிக்கும் ‘போங்கு’ ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது!

‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்பட நாயகனான முன்னணி ஒளிப்பதிவாளர் நடராஜ் (நட்டி) கதாநாயகனாக நடித்துள்ள ‘போங்கு’ திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது. கே.ஆர். பிலிம்ஸ் சரவணன் இந்த படத்தை வெளியிடுகிறார்

ருஹி சிங் நாயகியாகவும், அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக இருந்த தாஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை புரொமோட் செய்வதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் 70எம்.எம் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி பேசுகையில், “தமிழ் திரையுலகம் மட்டும் அல்ல, இந்தி திரையுலகமும் கொண்டாடும் இந்தியாவின் தலைசிறந்த் ஒளிப்பதிவாளர் நட்ராஜை இந்த படத்துக்காக நான் ஒளிப்பதிவு செய்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

இயக்குனர் தாஜ் பேசுகையில், “சாலை வழிப்பயணம் பற்றிய படம் இது. விறுவிறுப்பான திரைக்கதை. நாயகன் நட்ராஜூக்கு ஏற்ற கதாபாத்திரம். ‘சதுரங்க வேட்டை’யைவிட பல மடங்கு சிறப்பாக அவர் நடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு அவர் இன்னும் அதிக அளவில் பேசப்படும் நாயகனாகி விடுவார் என்பது நிச்சயம்” என்றார்.

நாயகன் நட்ராஜ் பேசுகையில், “ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு உள்ளிட்ட சில பிரச்சனைகளால் ‘போங்கு’ பட வெளியீடு தள்ளிப்போய் விட்டது. இப்போது சரியான நேரத்தில் அது திரைக்கு வருகிறது. கார் திருட்டு பற்றிய சுவாரஸ்யமான கதை இது. இப்படத்தில் பயன்படுத்துவதற்காக விலையுயர்ந்த ஆடம்பர கார்களை வரவழைத்து உதவினார்கள் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு நன்றி. காரை எளிதாக திருடுவது எப்படி என்ற வித்தையை அந்தந்த கார் நிறுவனத்தினரே எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் அப்படியே படத்தில் காட்டாமல், கதைக்கு தேவையான அளவு மட்டுமே படத்தில் சொல்லியிருக்கிறோம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் இப்படம் மகிழ்விக்கும்” என்றார்.