“ஜோக்கர்’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம்!” – பவா செல்லத்துரை

தீவிர இலக்கியவாதிகளுக்கும், தீவிர சினிமாக்காரர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் பவா செல்லத்துரை. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவரை பற்றி தனியொரு ஆவணப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் உள்ளது இவரது முக்கியத்துவம். இவர் ராஜூமுருகனின் ‘ஜோக்கர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இது குறித்து பவா செல்லத்துரை கூறியிருப்பது:-

என் பல திரைப்படத்துறை நண்பர்கள் நடிக்க கூப்பிட்டபோதெல்லாம் அதை கூடியவரை தவிர்த்தே வந்தேன்.

நண்பர் எஸ்.பி.ஜனநாதன் சொல்லி கல்யாண் ‘பூலோக’த்தில் நடிக்க அழைத்த குரலை தட்ட முடியாமல் ஏற்றுக்கொண்டேன்.

‘பிசாசு’ படத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் பாத்திரம் நான் நடிக்க வேண்டியதுதான். புவனேஷ் எனக்கு ஒத்திகையெல்லாம் நடத்தி முடித்தார்.

என் ஒரு பிறந்தநாளை படப்பிடிப்பை நிறுத்தி கேக் வெட்டி மிஷ்கின் கொண்டாடி முடித்து ஏற்பட்ட அமைதியில், அவரை தனியே அழைத்து நடிக்க முடியாத என் கூச்சத்தைச் சொன்னேன். அதை அரைமனதோடு ஒத்துக் கொண்டார்.

‘பிசாசு’படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்து வெளியே வந்தவுடன் மிஷ்கின், “நீங்க நடிக்காத கோபத்துலதான் படத்துல உங்க பேரை பயன்படுத்தியிருக்கேன்” என்றபோது சிரித்துக் கொண்டேன்.

கடந்த டிசம்பரில், அநேகமாக அது ஒரு கிருஸ்மஸ் தினம். நண்பர் ராஜுமுருகன் தொலைபேசியில் அழைத்து அவருடைய ‘ஜோக்கர்’ படத்தில் நான் நடிக்க வேண்டும் என கேட்டபோது, தொலைபேசியின் வழியே என் தயங்கிய குரலறிந்து, அன்று மாலை தன் ஆறேழு உதவி இயக்குநர்களோடு ராஜுமுருகன் வீட்டிற்கு வந்தார்.

இரண்டு மணிநேரம் கதை சொன்னார். என் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அக்கதை என்னை கைப்பிடித்து அழைத்தது. உரையாடலின் இறுதியில் நான் ராஜுமுருகனின் கைகளுக்கு என் சம்மதத்தைக் கடத்தினேன்.

இப்படித்தான் ‘ஜோக்கர்’ படத்தில் நான் பங்கேற்றேன்.
படப்பிடிப்பிலிருந்த இருபது நாட்களும் வழக்கத்துக்கு மாறா என் மிகுந்த பொறுப்புணர்வோடு அதிலேயே கிடந்தேன். தன் ஆற்றாமைகளை குடியின் வழியே வெளியேற்றிவிட முயலும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரனும், நிகழில் ஒரு வாட்டர் கம்பெனியில் செக்யூரிட்டி கார்டாகவும் என் பாத்திரம். நான் அதுவாகவே மாறியிருந்தது வீட்டிற்கு வந்த பிறகுதான் உணர முடிந்தது. மழையும் குளிரும் படப்பிடிப்பும் தோழமையுமான அற்புதமான நாட்கள் அவை.

ஒளிப்பதிவாளர் செழியனும், அவரின் முதல் உதவியாளர் மணியும் என்னை தங்கள் காமிரா வழியாக அப்படி ரசித்து செழுமையாக்கினார்கள்.

இயக்குனர் ராஜுமுருகன், சோமு, எழில், சரவணன், லிங்கம், அலெக்ஸ் என படைப்பூக்கமுள்ள இளைஞர்கள் என்னை நான் தொலைத்துவிடாமல் வெதுவெதுப்பாக வைத்திருந்தார்கள்.

இதோ இத்திரைப்படம் இம்மாதம் 12-ம் தேதி திரைக்கு வருகிறது. தீவிர சமூக அக்கறையுடனும், அரசியல் விமர்சனங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை எங்களூரில் என் சொந்த ஊர் மக்களோடு சேர்ந்து பார்க்கப் போகும் அப்பரவச கணத்திற்கு காத்திருக்கிறேன்.

இவ்வாறு பவா செல்லத்துரை கூறியுள்ளார்.