“ஜெ. இறந்து சில நாட்களோ, ஒரு மாதமோகூட ஆகியிருக்கலாம்”: பாலபாரதி சந்தேகம்!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை. சாதாரண காய்ச்சல் என்றுதான் அப்போலோவில் சேர்த்தார்கள். அதற்குப் பிறகு, எதுவுமே வெளிப்படையாக  நடக்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். அவ்வப்போது அப்போலா மருத்துவமனை அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தது. ‘மருத்துவமனை அறிக்கைகளை விட அரசு சொல்வதுதானே சரியானது’ என நான் முகநூலில் எழுதிய அடுத்த நாள், அரசு தரப்பில் அறிக்கை வந்தது.

‘சரி… அப்போலாவில் அப்படி என்னதான் நடக்கிறது’ என்பதை தெரிந்துகொள்ள, ராகுல்காந்தி சென்று பார்வையிட்ட அதே தினத்தன்று நானும் அப்போலாவுக்குச் சென்றேன். என்னை யாரும் தடுக்கவில்லை. இரண்டாம் மாடி வரை சென்றுவிட்டேன். அங்கே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி என்னிடம் வந்து, ‘அம்மா நலமாக இருக்கிறார்’ என்றார். ஆனாலும் அங்கு நடப்பது எல்லாமே ஒரு நாடகம் போல இருந்தது. திடீரென்று ஒருநாள் ஜெயலலிதாவின் மரணச் செய்தி வருகிறது.

இந்த விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே எல்லாமே மர்மமாக இருக்கிறது. ஊடகங்கள் 24 நேரமும் மருத்துவமனையின் வாசலில் காத்திருக்கும் நிலையில்கூட, மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவின் உடல் வண்டியில் ஏற்றப்படும் காட்சியைப் பார்க்க முடியவில்லை.  அதேபோல போயஸ் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல், அடுத்த நாள் காலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் நான் பயணங்களில் ஈடுபடும்போது ஒரு விஷயத்தைக் கவனிக்கிறேன். பொதுமக்கள் பலருக்கும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன. அவரின் உடலைப் பார்க்கும்போது ஓரிரு நாட்களுக்கு முன் இறந்தவரின் உடலைப் போல அது இல்லை. அவர் இறந்து சில நாட்களோ… ஒரு மாதமோ கூட ஆகியிருக்கலாம் என்பதுபோலத்தான் இருந்தது. ராஜாஜி அரங்கில் அவர் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது, நடந்த பல விஷயங்களும் அதைத்தான் உணர்த்தின.

ஜெயலலிதா மரணம் பற்றிய எல்லா விஷயங்களையும் பேச வேண்டும். ஏன் இப்போது பேச வேண்டும் என்றால்… மாநிலத்தின் ஆகப் பெரிய அதிகாரத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கே இந்த நிலை என்றால், அவரைப் பார்த்து அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு பெரும் தயக்கத்தை இது உருவாக்கலாம். மேலும், இதில் மத்திய அரசின் தலையீடு இருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

ஜெயலலிதாவின் அப்போலோ தினங்களில் நடந்த விஷயங்களை மறைத்துவிட்டு, அடுத்த முதல்வர், பொதுச்செயலாளர் என வெவ்வேறு அஜெண்டாக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தாவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மர்மங்கள் உடைபட வேண்டியது அவசியம்.

இவ்வாறு பாலபாரதி கூறியுள்ளார்.

0a1d