‘அஞ்சலி பாப்பா’ படப்பிடிப்பு: இளையராஜா துவக்கி வைத்தார்!

1990ஆம் ஆண்டு சிறுமியை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜா, தற்போது 3வயது குழந்தையை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவாகும் ‘அஞ்சலி பாப்பா’ என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பை இளையராஜா துவக்கி வைத்தார்.

பெங்களூரை சேர்ந்த அஜய் நோயல் என்ற இளைஞர், இசையமைப்பாளர் இளையராஜாவின் மிகப் பெரிய ரசிகர். சமீபத்தில் இளையராஜாவை சந்தித்த அவர், தன்னிடம் இருந்த ஒரு குழந்தை பற்றிய கதையை கூறியிருக்கிறார்.

இளையராஜாவுக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போய் விட்டது. “இந்த கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் இசையமைத்து தருகிறேன்” என்று கூறியுள்ளார். இளையராஜா கால்ஷீட் கிடைத்த சந்தோஷத்தில் திளைத்த அஜய், படத் தயாரிப்பு வேலையில் இறங்கி விட்டார்.

மூன்று வயது குழந்தையின் கதையான ‘அஞ்சலி பாப்பா’வில் விபுலா நாயக் என்ற குழந்தை அஞ்சலி பாப்பாவாக நடிக்கிறது. இயக்குனர் அஜய் நோயலே கதையின் நாயகனாக நடிக்கிறார். நாயகி சன்னதி. இவர்களுடன் ஆகாஷ், விஷாகா, வந்தனா, நிவேதா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஷில்பா நாயக் தயாரிக்கிறார். எம்.ராஜதுரை ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘அஞ்சலி பாப்பா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பை இளையராஜா துவக்கி வைத்தார்.

0a6q