அக்ரஹாரத்தில் இன்று நிறைய கழுதைகள்!

‘அக்ரஹாரத்தில் கழுதை’ என ஒரு படம். ஜான் ஆபிரகாம் இயக்கியது. காலத்தின் ரெலவன்ஸ் கருதி மீண்டும் பார்த்தேன். ‍‍‍

‍‍‍‍‍‍ஒரு புரொபசர் வீட்டுக்கு கழுதை குட்டி ஒன்று வந்து சேர்கிறது. தாய் கழுதை கொல்லப்பட்டு விட்டதால், குட்டிக்கு போக்கிடம் இல்லை. புரொபசர் அதை வளர்க்கிறார். கல்லூரியில் பிரச்சினை ஆகிறது. வேலையை விடுகிறார்.

சொந்த ஊருக்கு சென்று தன் பெற்றோர் வாழும் அக்ரஹாரத்தில் கழுதை குட்டியை விடுகிறார். ஊமைப்பெண் உமாவை பராமரிக்க சொல்லிவிட்டு ஊர் திரும்பி விடுகிறார். ஊருக்குள் இருக்கும் வாண்டுகள் கூட்டம் கழுதையை கொண்டு போய் ஒரு கிழவி அம்மாள் மேல் மோத விடுகின்றனர்.

ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. அந்த வீட்டுக்கு வேண்டாத பிராமணர் ஒருவர், வாண்டுகள் கூட்ட தலைவனை அழைத்து பணம் கொடுக்கிறார். அவனும் கழுதையை வீட்டுக்குள் விரட்டி விடுகிறான். பெண் பார்க்க வந்தவர்கள் கோபத்துடன் கிளம்பி விடுகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் தமக்கு பிடிக்காதவர் வீட்டில் நடக்கும் திவசம், யாகம் போன்றவற்றை குலைக்க கழுதையை பயன்படுத்தி கொள்கின்றனர். புரொபசர் அப்பாவுக்கு ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன.

ஊமைப்பெண் உமாவை ஊர் மைனர் ஒருவன் கர்ப்பமாக்குகிறான். அவளும் குழந்தை சுமக்கிறாள். குழந்தை இறந்து பிறக்கிறது. உமாவின் தாய் குழந்தையை கொண்டு போய் கோயிலில் போட்டுவிடுகிறாள். இறந்த குழந்தையால் கோயில் தீட்டுப்பட்டு விட்டதாக அக்ரஹார பெரியவர்கள் கருதுகிறார்கள். உமாவின் தாயை கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். அவளோ கழுதைதான் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து கோயிலில் போட்டது என பொய் சொல்கிறாள்.

எல்லாரும் கூடி கோயிலுக்கு தீட்டு விளைவித்த கழுதையை கொல்வதென முடிவு செய்கிறார்கள். அக்ரஹாரத்துக்கு வெளியே இருக்கும் ஊர்காரர்களை கூப்பிட்டு வேலையை கொடுக்கிறார்கள். அவர்களும் கழுதையை மலைக்கு கொண்டு போய் அடித்து கொல்கிறார்கள். குடுகுடுப்பைக்காரன் அக்ரஹாரத்துக்குள் வந்து, “பாவம் சேர போகிறது” என எல்லார் வீட்டு முன் நின்றும் குறி கூறுகிறான். கழுதையை கொல்ல ஆணையிட்டவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது.

ஒருவர் தனக்கு செத்து போன கழுதை காட்சி தந்ததாக கூறுகிறார். சேதி பரவுகிறது. நிறைய பேர் கழுதையை பார்த்ததாக சொல்கிறார்கள். அக்ரஹாரத்தை விட்டு தொலைந்து போனவன் பல ஆண்டுகளுக்க்கு பின் திரும்புகிறான். பக்கவாதம் தாக்கிய 80 வயது மூதாட்டி எழுந்து நடக்கிறாள். கொல்லப்பட்ட கழுதை ‘தெய்வீக கழுதை’ என்கிறார்கள்.

கடவுளின் அவதாரம் என முடிவு செய்து, கழுதைக்கு கோயில் கட்ட தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு முன், மலைக்கு சென்று, கொல்லப்பட்ட கழுதையின் மண்டை ஓட்டை கொண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. மண்டை ஓட்டை எரித்து ஊர்க்காரர்கள் சாமி ஆடுகிறார்கள். இவை ஏதும் பிடிக்காத புரோபசரும் ஊமைப்பெண் உமாவும் மலை மேல் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். மண்டை ஓட்டு தீ பெரிதாகி, பரவி ஊரே தீக்கிரையாவதாக படம் முடிகிறது.

1977-ல் வந்த படம். வடிவ ரீதியான சிக்கல்கள் இருப்பினும், அது பேசும் கருத்து மொத்த இந்திய நாகரிகங்களின் அரசியல்.

அக்ரஹாரம் என்ற அமைப்புக்குள் பொருந்தாத கழுதை என்னவெல்லாம் ஆகும்? அந்த அமைப்பு, தன் சொந்த அரசியலுக்கு எல்லாம் கழுதையை பயன்படுத்துகிறது. கடைசியில் பலியும் கொடுக்கிறது. இறந்த பின்னும் கழுதையை விடாமல் தெய்வமாக்கி தன் அரசியலுக்கு அமைப்பு பயன்படுத்தி கொள்கிறது.

எப்படி பெண்ணடிமைத்தனம் கொண்ட மண்ணில் பெண் தெய்வங்கள் இருக்கின்றன என்பதோடு இக்கதையை பொருத்தி பார்க்கலாம். தலித்துகளின் நிலையுடன் பொருத்தலாம். புரோகித சாதியின் ஆதிக்கத்துடன் பொருத்தி பார்க்கலாம். அட, இன்றைய நிலையில் இந்தியாவின் பல விஷயங்களுடன்கூட பொருத்தி பார்க்கலாம்!.

புனிதப்பசு, ஜல்லிக்கட்டு காளை வதை, பாகிஸ்தானுக்கு போ, தேசிய கீதம், கறுப்பு பண ஒழிப்பு, இந்திய பெருமிதம் என எத்தனை தெய்வீக கழுதைகளை நாம் அனுதினம் பார்த்து கொண்டிருக்கிறோம்! படத்தின் முடிவு போல் ஊரை எரிக்கும் பெருந்தீ எப்போது வாய்க்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

மலை உச்சியில் நிற்கும் புரொபசர் போல பெருந்தீயை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!

RAJASANGEETHAN JOHN