கலையரசன் நடிக்கும் முக்கோண காதல் – த்ரில்லர் ‘அதே கண்கள்’!

1967 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் – காஞ்சனா நடிப்பில், ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான ‘அதே கண்கள்’ மிகப் பெரிய வெற்றியடைந்தது. தற்போது, இதே தலைப்பில் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் புதுப்படம் தயாரிக்கிறார்.

“இந்த புதிய ‘அதே கண்கள்’ படத்திற்கும் பழைய படத்திற்கும் இருக்கும் ஒரே தொடர்பு தலைப்பு மட்டுமே, கதையில் எந்தவித தொடர்பும் இல்லை” என்றார் இப்படத்தின் இயக்குநர் ரோஹின்.

இதில் ஹீரோவாக கலையரசன் நடிக்க, ஹீரோயின்களாக ஷிவதா, ஜனனி ஐயர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் பார்வை தெரியாத செஃப் வேடத்தில் கலையரசன் நடிக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் பார்வையில்லாத் அவருக்கு கதை நகரும்போது ஒரு கட்டத்தில் பார்வை வந்துவிடுமாம். தனக்கு பார்வை வந்ததுமே, கண் தெரியாதபோது நடந்த விஷயங்களை தேடி கலையரசன் போகும்போது ஏற்படும் விளைவுகளை திரில்லராகவும், அதே சமயம் முக்கோண காதல் கதையாகவும் இயக்குநர் ரோஹின் சொல்லியிருக்கிறாராம்.

அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள ‘அதே கண்கள்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.