நடிகை கஸ்தூரி சொன்னதை ‘தூத்தேரி’ என்று காரி உமிழ்ந்துவிட்டு கடந்து போவோம்!

 திருட்டு ரயில் – கலைஞர்

இவையிரண்டையும் தொடர்புபடுத்தி கலைஞரை அவதூறு பாடுவது ரொம்ப காலமாகவே தொடர்கிறது. இவ்வகையில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் வாசனை பெயரை வைத்துக்கொண்டு துர்நாற்றம் பரப்பும் ஒரு நாலாந்தர நடிகை.

கோயபல்ஸ் தியரியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு பொய்யை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்ப வைப்பதுதான் கோயபல்ஸ் தியரி. அதையே திருப்பித் திருப்பிச் சொல்வதால் அதுவே ஒரு கட்டத்தில் உண்மையென உறுதியாக நம்பப்பட்டுவிடும்.

இந்த ‘திருட்டு ரயில்’ தியரியை முதன் முதலில் வித்திட்டவர் நம் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான பெருமைக்குரிய ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான்.

கண்ணதாசன் சமுதாயத்திற்கு எந்தளவுக்கு நல்லது செய்துவிட்டு போயிருக்காரோ அந்தளவுக்கு கெடுதலும் செய்துவிட்டு போயிருக்கிறார்.

நான் எழுதியிருக்கும் இவ்வாசகம் என்னைப் போன்ற கண்ணதாசன் ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை. நான் கண்ணதாசனின் ஆத்மார்த்த ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு பெருமை உண்டு. கண்ணதாசனைப் போன்று ஒரு ஜனரஞ்சகக் கவிஞன் இதுவரை யாரும் பிறந்ததில்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

கண்ணதாசன் முன்னுக்குப் பின் முரணான பல விஷயங்களை அவிழ்த்துவிட்டு போயிருக்கின்றார். அவை யாவும் 100% அக்மார்க் உண்மை என்று சொல்ல முடியாது. நிதானத்தில்தான் எழுதினாரா என்பதும் நமக்குத் தெரியாது.

“மானிடரைப் பாடி அவர் மாறியதும் ஏசுவதென் வாடிக்கையான பதிகம்

மலையளவு தூக்கி உடன் வலிக்கும் வரை தாக்குவதில் மனிதரில் நான் தெய்வமிருகம்”

என்று வாக்குமூலம் தந்துவிட்டுச் சென்ற ஒருவரின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொண்டு சர்ச்சை செய்வதே ஒரு தேவையற்ற வேலைதான். இருந்த போதிலும் இத்தருணத்தில் அது தேவை.

“நடைபாதை வணிகன் என்று

நான் கூவி விற்ற பொருள்

நல்ல பொருளில்லை அதிகம்”

என்று அவரே ஒத்துக் கொள்கிறார். அதாவது நான் நிறைய பொய்யான விஷயங்களை உண்மை என்று சொல்லியிருக்கிறேன். அதை நம்பாதீர்கள் என்று மறைமுகமாகச் சொல்கிறார்.

“இந்திக்குப் பாடை கட்டி,

சங்கொடும் பறைமுழக்கி,

சட்டியில் கொள்ளி தூக்கி

அங்குல எழும்பு கூட,

அகப்படா தழிப்போம் உண்மை”

என்று பாடிய அதே நம் கவிஞர்தான் பிற்காலத்தில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு “இளகியதோர் காலையில், புதுடில்லி ஓடுவேன், இந்தியில் பேசி மகிழ்வேன்” என்று தடம் புரண்டார்.

இப்போது கவிஞர் உயிரோடு இருந்திருந்தால் ஒன்று சீமானோடு சேர்ந்து செயல்பட்டிருப்பாரோ அல்லது அல்லது பா.ஜ.க.வோடு சேர்ந்து “ஜாடிக்கு ஏற்ற மூடி, மோடிக்கு வாழ்த்துப் பாடி” என்று எதுகை மோனையோடு கவிதை பாடி நம்மை மகிழ்வித்திருப்பாரோ என்று நமக்குத் தெரியாது.

“எப்போதும் தமிழ்மொழி போல் ஒரு மொழியே இல்லை!

இருக்கிறதென்பான் தாய் பெண்ணே இல்லை!”

என்று உணர்ச்சிப் பொங்க பாடுவார் கண்ணதாசன். தமிழ்மொழிபோல் இன்னொரு சிறப்பானதொரு மொழி இருக்கிறது என்று ஒருவன் சொன்னால் அவனுடைய தாய் ஒரு பெண்ணே அல்ல, பேய் அல்லது பிசாசு என்று இவ்வரிக்கு நாம் பொருள் கொள்ளலாம்.

“புஷ்பமாலிகா” என்று தன் நூலுக்கு பெயர் சூட்டிவிட்டு “வடமொழி பெயரை விரும்பித்தான் சூட்டினேன். தனித் தமிழில் எனக்கு பற்றுதலில்லை” என்று விளக்கமும் கொடுப்பார்.

“ஏன் அர்த்தமுள்ள இந்து மதம் என்று பெயர் வைத்தீர்கள். பொருள் பொதிந்த இந்து மதம் என்று தமிழில் பெயர் வைக்கக்கூடாதா?” என்று யாரும் அவரிடம் விவாதம் செய்து வெற்றி பெற முடியாது.

“இளமீசை புதுமீசை என்றாலும் தமிழ் உருவில்

வுளர்மீசை கொண்ட இவர் வற்றாத கலைத் தம்பி

நட்பினுக் கோர் பிசிராந்தை நம் கருணாநிதி யென்பேன்”

என்று கலைஞரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்

கண்ணதாசனை பிசிராந்தையாருடன் ஒப்பிட்டதற்கு காரணம், கோப்பெருஞ்சோழனுக்காக பிசிராந்தையார் எப்படி வடக்கிருந்து உயிர் துறந்தாரோ அதுபோல தன் நட்புக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர் கருணாநிதி என்று புகழ் பாடுகிறார் கவிஞர்.

அப்படிப்பட்ட உயிர் நண்பர் மீது இப்படியொரு அப்பட்டமான அவதூறு இவர் சொல்கிறார் என்றால் இவர் எப்படி உண்மையான நண்பனாக இருக்க முடியும் என்ற கேள்வி நம் மனதுக்குள் எழுகிறது.

“வெற்று முரசொலியை விட்டுவிட்டு நாமெழுந்து வெற்றி முரசொலிப்போம்” என்று கலைஞரை விட்டு பிரிந்து வந்தபோது பாடுகிறார்.

“தனக்கொரு வாழ்வு, தனக்கொரு சுகமென,

நினைக்கவும் அறியா நேர்மதியாளர்

அண்ணாத் துரையெனும் அஞ்சாநெஞ்சினர்”

என்று அண்ணாவை வானளாவப் புகழ்ந்த அதே வாய்தான் பிறகு வேறுவிதமாக பேசுகிறது. “அது வேற வாய். இது……வாய்” என்று வடிவேலு சொன்ன வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

“எங்கே பகைவரெனச் சுற்றும் முற்றும் பார்த்தார்

தூங்கி வழிந்திருந்த தம்பியைத்தான் கண்டான்

தானையினைக் காணவில்லை”

என்று அண்ணாவை வேறொரு தருணத்தில் கேலி செய்து திருப்தி அடைந்துக் கொள்கிறார் நம் கவியரசர்.

இப்பொழுதும் சொல்கிறேன். கண்ணதாசனைப்போல் ஒரு ஜனரஞ்சகக் கவிஞன் இந்த யுகத்தில் பிறக்கவில்லை. அதற்காக அவர் வன்மத்திலும், மனக்கசப்பிலும் பிறரை எள்ளி நகையாடியதெல்லாம் உண்மை என்று நான் நம்பிவிடவில்லை.

கண்ணதாசன் பிறவிக் கவிஞன். விரலிடுக்கில் வித்தையை ஒளித்து வைத்திருந்தவன். சொற்சிலம்பத்தால் நம்மை சொக்க வைத்தவன். இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் தமிழ் இவனுக்கு வளைந்துக் கொடுத்தது. சின்னச் சின்ன சொற்களால் நம்மை சிறகடிக்க வைத்தவன்; சிறை பிடித்தவன்.

அரசியல் ரீதியாக ஒருவருடைய கருத்தை பரிகசித்து பேசலாம், பாடலாம், ஆனால் ஒருவரின் உருவ அமைப்பை வைத்து கேலி செய்வது மட்டகரமான ரசனை. பண்டிட் ஜவகர்கலால் நேருவை இப்படித்தான் பரிகசித்தார் கண்ணதாசன்.

“என் சொல்வேன் சுட்டதொரு கத்திரிக்காய் என்பேனா?

கருங்குதிரை முகமென்று சித்தரித்துச் சொல்வேனா?

சப்பியபின் போட்டதர மென்று உரைப்பேனா?

பிள்ளை பறிகொடுத்த பேதையென உட்கார்ந்த

பேரறிஞர் நேருமுகம் பிறிதொன்றுக்கு உவமை இல்லை

பழம்போன வாழைத்தோல் பக்குவமே நேருவமை”

சினிமாவில் கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சியில்தான் “முள்ளம்பன்றி தலையா, தேங்காய் தலையா, போண்டா வாயா, கின்னிக்கோழி மண்டையா, அடுப்புகரி வாயா” என்ற வருணனையெல்லாம் கண்டோம். படம் பார்க்க வந்த ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

அதற்கு முன்பே கண்ணதாசன் இதுபோன்ற வருணனைகளுக்கு முன்மாதிரியாக இருந்துவிட்டு போயிருக்கிறார் என்று தெரிகிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் நேருவை ஏசுபிரானுடன் ஒப்பிட்டுப் பாடி அவரைக் கடவுளாகவே ஆக்கி விடுகிறார்.

“ஆதி மகன் ஏசுபிரான் அடங்கிவிட்டான் என்றிருந்தோம்

தாவியவன் பாரதத்தில் ஜவகர்லால் ஆகிவந்தான்

ஏசுவார் தம்மிடையே ஏசு எனப் போர் படைத்த

ஏசு மகனே வாழ்ந்தது போல் பாமகன் வாழுகின்றான்”

“ஏசு காவியம் பாடிய கவிஞர் அவர்களே! இந்த புகழ்ச்சியெல்லாம் டூ-மச் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று நாம் அவரைக் கேட்கத் தோன்றுகிறது.

“சொத்து சுகம் நாடார்! சொந்தந்தனை நாடார்!

பொன்னென்றும் நாடார்! பொருள் நாடார்! -தான் பிறந்த

நாடென்றே நாடித் தன் நலமென்றும் நாடாத”

என்று கர்மவீரர் காமராஜரைப் பாடிய அதே வாய்தான் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவரை “கக்கூஸில் விழுந்த அல்வாத்துண்டு” என்று பாட வைத்தது. “இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா” என்று கவுண்டமணி பாணியில் கடந்து போக வேண்டியதுதான். கண்ணதாசன் ‘வனவாச’த்தில் “திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எழுதியதையெல்லாம் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

கண்ணதாசன் எழுதி விடுவார். அதன் விபரீதத்தை சற்றும் உணர மாட்டார்.

“ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மார்க்கெட்டு அடையாளம்” என்று கண்ணதாசன் பாடல் எழுதியபோது மூர் மார்க்கெட் வியாபாரிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து போராட்டம் செய்தார்கள்.

‘குமரிப்பெண்’ படத்தில் ரவிச்சந்திரன் கூர்க்காவை கிண்டல் செய்வது போல் ஒரு பாடல் :

“தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு

திருடரைத் திருடிக்கொண்டு ஓடவிட்டு

அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு

ஆர்ப்பாட்டம் என்ன ராஜா”

பாவம் இந்த கூர்க்காக்கள். நேபாளத்திலிருந்து இங்கு வந்து இரவு முழுவதும் விழித்திருந்து, சொற்ப தொகைக்காக, உயிரை பணயம் வைத்து காவல் காப்பார்கள். இந்த வரியை கேட்டுவிட்டு கூர்க்கா அனைவரும் ஒன்று திரண்டு கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

சக்கரவர்த்தி ராஜாஜியை புகழ்ந்து தள்ளினார் கண்ணதாசன்

“ஊராட்சி என்றாலும் நகராட்சி என்றாலும்

ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்”

“சீரான அரசாட்சி சிலகாலம் செய்தாலும்

திறமாக செய்த புனிதன்”

“இந்த வையத்துள் ராஜாஜி வாழ்வுக்குச் சான்றாக

வாழ்வொன்று எங்கும் உளதா…?”

வேறொரு சந்தர்ப்பத்தில் ராஜாஜியைத் தாக்கி மிகவும் தரக்குறைவாக கண்ணதாசன் எழுதிய வாசகங்களை எழுத என் தட்டச்சு தடுமாறுகிறது.

“உள்ளும் புறமும்” என்று ஒரு புத்தகம் கண்ணதாசன் எழுதினார். அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரை வசை பாடுவதற்காக எழுதப்பட்ட புத்தகம்.

அதில் சிலவற்றை மட்டும் இங்கே தந்துள்ளேன். எம்.ஜி.ஆரைப் பற்றி கொச்சையாகவும் பச்சையாகவும் எழுதிய பலவற்றை இங்கே மறைத்துவிட்டேன். அப்புறம் அ.தி.மு.க.காரர்களும் பொங்கி எழுவார்கள்.

“ஏதோ இரண்டொரு வெற்றிகளை குருட்டுத்தனமாக பெற்றதிலிருந்து எம்ஜியாரின் ஆணவம் அளவுக்கு மீறி போய்விட்டது, போய் கொண்டிருக்கிறது. தமிழ் பெண்களை கேலி செய்கிறார். கருணாநிதி காலம் முடிந்துவிட்டது என்கிறார். இவர்களுக்கு எல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது என்கிறார். பிற மொழிகளில் இவரை ஒரு துணை நடிகராக கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எந்த அரசியல் கட்சியிலும் ஒரு தொண்டனாக கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்கே இவர்தான் பெரிய நடிகர்., அரசியல் தலைவர். இந்த நாட்டில் தமிழர்கள் மட்டுமே அப்பாவிகளாக இருப்பதால் இவரது ஆணவம் எல்லை மீறி போய்விட்டது” (பக்கம் 3)

முதன் முதலில் எம்.ஜி.ஆரை மலையாளி என முத்திரை குத்தி ‘இவர் நம்மவரல்ல’ என்ற கருத்தை தமிழ்நாட்டு மக்களிடையே வித்திட்டவர் நம்ம கவிஞர் ஐயாதான். “பேசுவது கிளியா” என்ற பாடலில் அவருக்கு பாட்டு எழுதுகிறேன் என்று பணம் வாங்கிக்கொண்டு “சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?” என்று போகிற போக்கில் மெதுவாக கீறி விட்டுச் சென்றார்.

“அவர் காமராஜரைப் போலவோ கருணாநிதியை போலவோ அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் அல்ல. இவர் மேக்கப் ரூமிலிருந்து ஓடிவந்தவர்” என்று எழுதினார் (பக்கம்-10)

“கட்சிக்காரரை கண்மணிபோல காப்பாற்றுவார் கருணாநிதி. கட்சிக்காரனை எப்போதும் கவனத்திலேயே வைத்திருப்பார் காமராஜர். இவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு எம்ஜியாரையா தமிழ்சாதி நம்புவது?’ (பக்கம்-12)

“அண்ணாவை விட நுணுக்கமான சிந்தனைகள் கருணாநிதிக்கே அதிகம்” (பக்கம் 15)

மேற்கூறிய கண்ணதாசனின் விமர்சனங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் கருணாநிதியை ஹீரோவாக பாவித்து எம்.ஜி.ஆரை திட்டித் தீர்த்து வன்மம் தீர்த்துக் கொண்டதை நாம் காண முடிகின்றது.

ஹீரோவாக இருந்த கலைஞர் கருணாநிதி திடீரென்று திருட்டு ரயில் ஏறிவந்த துரோகியாக மாறிப் போகிறார்.

தன்னைப் பற்றி அவதூறு சொன்ன கவியரசர் கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். சரியானதொரு தண்டனையை வழங்கினார்.

//இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நாண நன்னயம் செய்துவிடல்//

என்ற திருவள்ளுவரின் குறள் எம்.ஜி.ஆருக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் கண்ணதாசனை அழைத்து “அரசவைக் கவிஞர்” என்ற அந்தஸ்து கொடுத்து கௌரவித்தார்.

வெட்கித்துப்போன கவிஞர் சொன்னது இதுதான்:

”நான் இன்னா செய்தேன், அவர் இனியது செய்தார், பணிந்து போவதுதானே அரசியல் மரபு”.

கஸ்தூரி சொன்னதை ‘தூத்தேரி’ என்று காரி உமிழ்ந்துவிட்டு கடந்து போவதுதான் அரசியல் நாகரிகம்.

-அப்துல் கையூம்