”மனம் வெளுக்க ஒரு மருந்து” – ரவிக்குமார் எம்.பி

0a1dஆதி திராவிட சமூகத்தினருக்கு வண்ணார் பணி செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர் ஜூலியஸ். மதம் மாறிய கிறித்தவரான ஜூலியஸ் ‘ஊருக்கு ஒரு குடி’என்ற நூலை எழுதியிருக்கிறார் . இது ஒரு தன் வரலாற்று நூல்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்துக்கு அருகில் தேவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சலவைத் தொழிலாளிகளாகத் தமது பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், சிறுவயதில் தான் சந்தித்த அவமதிப்புகளையும் இதில் பதிவு செய்திருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களால் கோர்க்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.

வெளுப்பதற்காக வீடுகளில் துணி எடுப்பது, வீடுகளில் சோறு எடுத்து அதை சாப்பிடுவது, அதில் சந்தித்த அவமதிப்புகள் இதில் கூறப்பட்டுள்ளன.

ஜூலியசின் குடும்பம் மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பாகவே கிறித்தவத்தைத் தழுவிய குடும்பமாகும். அவர் பிறந்த தேவனூரில் ஆதிதிராவிட குடும்பங்கள் சுமார் 100 இருக்கும். அந்தக் குடும்பங்களுக்கு சலவைத் தொழில் செய்வது இவர்களுடைய பணி. அது மட்டுமல்லாமல் கல்யாணம், இறப்பு முதலான சடங்குகளின் போதும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். ஆதிதிராவிட சமூகத்தினர் ஒப்பீட்டளவில் சமயச் சடங்குகளுக்கு அவ்வளவாக மதிப்புக் கொடுப்பதில்லை. என்ற போதிலும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு சடங்கிலும் வண்ணாருக்குப் பங்கு உண்டு.

ஆதிதிராவிட சமூகத்தில் வண்ணார், நாவிதர், காவல்காரர் முதலான சேவைப் பிரிவினரும்; தச்சர், கொல்லர், நெசவாளர் முதலான கைவினைஞர்களும் இருந்துள்ளனர். ஆதிதிராவிடர்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் சேவை சாதியினருக்கு முக்கியமான பங்கு இருந்துள்ளது.

ஜூலியசின் சான்றிதழில் வண்ணார் என்ற அடையாளமில்லை. அவர் ஆதிதிராவிடர் – மதம் மாறிய கிறித்தவர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் தன்னை முழுமையான கிறித்தவராகவோ, முழுமையான ஆதிதிராவிடராகவோ உணரமுடியவில்லை.

ஆதிதிராவிட சாதியிலும் இருக்கும் படிநிலை, அதன் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு என்பதுதான் அவர் ஒன்ற முடியாததற்குக் காரணம். அது இந்து மதத்தின் ‘கொடை’ ஆகும்.

தேவனூரில் இருக்கும் ஒரு சில கிறித்தவ குடும்பங்களும் மதத்தால் கிறித்தவர்களாக இருந்தாலும் சாதியால் ஆதிதிராவிடர்களாகவே வாழ்கின்றனர். அதற்குக் காரணம் அவர்களது எண்ணிக்கைக் குறைவாக இருப்பது மட்டுமல்ல, கிறித்தவமும் சாதி காப்பாற்றும் மதம் ஆகிவிட்டதே அதற்குக் காரணம்.

0a1c

ஜூலியஸின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்கள்: கல்வியும் , அவர் பெற்ற திறனும் ( skill) (தையல் பயிற்சி) தான். எட்டாம் வகுப்பு வரைதான் அவர் படிக்க முடிந்தது என்றாலும் அந்த கல்வியே அவருடைய அந்தஸ்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அடுத்ததாக திறன் – அவர் தையல் பயிற்சி எடுத்துக் கொண்டு பலருக்கும் துணிகளைத் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தது சாதிய இறுக்கத்தில் ஒரு நெகிழ்வை உண்டு பண்ணியிருக்கிறது. அத்துடன் அவருக்கும் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. இது ஜூலியசுக்கு மட்டும் இன்றி பட்டியல் சமூகம் முழுமைக்கும் பொருந்தும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இழிவுகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அவர்களுக்குக் கல்வியும் திறன்களும் தேவை.

சாதி காப்பாற்றும் மதமாக ஆகிவிட்டாலும்கூட கிறித்தவ மதம் ஜூலியஸ் குடும்பத்தினரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட காலமாக அவர்கள் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தாலும், பாதிரியார்களுக்குத் துணி வெளுத்துக் கொடுத்தாலும் அங்கு பங்குத் தந்தையாக வந்த தேவசகாயராஜ் என்ற ஒரு தலித் பாதிரியார்தான் நீங்கள் சோறு எடுக்காதீர்கள், துணி வெளுக்காதீர்கள், சடங்குகளைச் செய்யாதீர்கள். அப்படியே செய்ய வேண்டுமென்றால் 50 ரூபாய் வாங்காதீர்கள், 500 ரூபாய் கேளுங்கள் என்று தன்மானத்தைத் தூண்டியிருக்கிறார்.

சோறு எடுத்துதான் சாப்பிட வேண்டும் என்ற அளவுக்கு ஜூலியஸ் வீட்டில் வறுமை கிடையாது. அவர்கள் வாத்து வளர்க்கிறார்கள் மற்ற வேலைகளுக்குப் போகிறார்கள். ஆனால் பழக்கத்தின் காரணமாகவே தன்னுணர்வு இல்லாமல் அதை செய்து வந்திருக்கிறார்கள். அது தவறு என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

சுதந்திரம் என்பது சுயமரியாதையோடு பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது. சுயமரியாதை உள்ளவர்களுக்குத்தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். அந்த பாதிரியார் சொல்லுகிற வரை ஜூலியஸ் குடும்பத்தினருக்கு இந்த தன்மான உணர்வு வராமல் போனது பண்பாட்டு ஆதிக்கம் எந்த அளவுக்கு மக்களை சுரணை அற்றவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

எத்தனையோ பாதிரியார்கள் வந்தாலும் அந்த பாதிரியார் மட்டும் இப்படி சொன்னதற்குக் காரணம் அவரும் தலித் கிறித்தவர் என்பதால்தான். ஜூலியஸுக்கு உதவிய பாதிரியார்கள் பெரும்பாலும் தலித் கிறித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி திராவிட சமூகத்தில் வண்ணார் பணி செய்கிறவர்கள் இப்போது ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஜூலியஸிடம் இதுபற்றிக் கேட்டபோது ஏதோ ஒரு ஊரில் மட்டும் இன்னும் துணி வெளுக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் புதிரை வண்ணார் எனத் தென் மாவட்டங்களில் அழைக்கப்படும் மக்களுக்கென நலவாரியம் உருவாக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து அதை அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். அந்த வாரியத்தில் நானும் உறுப்பினராக இருந்தேன். அந்த வாரியத்தின்மூலம் இண்டஸ்ட்ரியல் லாண்டரிகளை உருவாக்கத் திட்டம் உருவாக்கி சில இடங்களில் அமைக்கப்பட்டன.

வட மாவட்டங்களில் புதிரை வண்ணார் என சாதிச் சான்றிதழ் வைத்திருப்போர் மிக மிக சொற்பமே. அவர்கள் ஆதிதிராவிட சமூகத்தின் அங்கமாகவே இருக்கிறார்கள். தொழில் அடிப்படையில் சிலர் பாகுபடுத்தப்பட்டால் அதைத் தடுப்பதற்கு ஆதிதிராவிட சமூகத்திலுள்ள ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும். சமத்துவத்தை மறுக்கும் ஒருவர் மற்றவர்கள் தன்னை சமத்துவத்தோடு நடத்தவேண்டும் எனக் கேட்கமுடியாது.

ஜூலியஸ் இப்போது ‘ உயிர் வலுவாக்க மையம்’ என்ற நிறுவனத்தை நடத்துகிறார். தனிப் பயிற்சி கொடுத்து பலரை கல்லூரியில் சேர்த்திருக்கிறார். வண்ணார் தொழில் செய்யும் குடும்பத்துப் பிள்ளைகள் மட்டுமின்றி ஆதரவற்ற மற்ற பிள்ளைகளையும் சேர்த்து படிக்க வைக்கிறார். 100 பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

ஜூலியஸின் இந்தத் தன் வரலாற்றுப் புத்தகம் வண்ணார் தொழிலில் இப்போதும் ஈடுபட்டிருப்பவர்களை மீட்டெடுத்து, துணி வெளுப்பதென்பதை முற்றிலும் எந்திரமயமாக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

ஜூலியஸுக்கு என் வாழ்த்துகள்!

#

ஊருக்கு ஒரு குடி

பூபாளம் பதிப்பகம்

176 பக்கங்கள் விலை 170/- ரூபாய்

ஜிபே : 9345704408

(இந்த நூலை 08.03.2023 (மகளிர் தினத்தன்று ) மாலை 4 மணிக்கு விழுப்புரம் தேவிபாலா ஓட்டல் அரங்கில் நான் வெளியிடுகிறேன்)

-ரவிக்குமார் எம்.பி