பார்த்தவர்கள் பாராட்டும் தரமான படம் ‘அச்சமின்றி’!
வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகும் நாளிலோ, அல்லது அதற்கு அடுத்த நாளிலோ தான் அப்படத்தை செய்தியாளர்களுக்கு போட்டுக் காட்டுவார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்காக, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெறக்கூடிய படமாக இருந்தால், அப்படம் வெளியாவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே அதை செய்தியாளர்களுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள்.
அப்படி, வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே செய்தியாளர்களுக்கு நம்பிக்கையுடன் போட்டுக் காட்டப்பட்ட சமீபத்திய படம் ‘அச்சமின்றி’.
டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் வி.வினோத்குமார் தயாரிப்பில், ராஜபாண்டி இயக்கத்தில், விஜய் வசந்த், சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிப்பில் நாளை (30ஆம் தேதி) வெளியாகும் ‘அச்சமின்றி’ படத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பார்த்த ஊடகவியலாளர்கள் அனைவருமே படக்குழுவினரை மனதார பாராட்டினார்கள்.
“கல்வி தந்தை”, :கல்வி தாய்” என பகட்டாக அழைக்கப்படும் கல்விக் கொள்ளையர்களை இப்படம் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. தனியார் பள்ளி, அரசு பள்ளி ஆகியவற்றில் உள்ள நிறைகுறைகளை பொறுப்புடன் அலசுகிறது. கருத்தும், காமெடியுமாய் கதை சுவாரஸ்யமாக நகருகிறது.
சென்னை தமிழில் சரளமாக பேசும் பிக்பாக்கெட் திருடராக விஜய் வசந்த், மனிதநேயமுள்ள என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி, கல்வி அமைச்சராக ராதாரவி, சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ நினைவூட்டும் மாவட்ட ஆட்சியராக தலைவாசல் விஜய் என ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, சரண்யா பொன்வண்ணனின் கதாபாத்திரமும், நடிப்பும் மிகப் பெரிய சர்ப்ரைஸ்!
மாணவச் செல்வங்களும், அவர்களது பெற்றோர்களும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம் – ‘அச்சமின்றி’.