ஆக்கம் – விமர்சனம்

தனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். அதன்மூலம் சதீஷ் தவறான வழிக்கு செல்லவும் வித்திடுகிறாள். தனது அன்னையின் பேச்சைக் கேட்டு நடக்கும் சதீஷ், அடிதடி சண்டை, கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களை செய்து வருகிறான்.

அதேநேரத்தில் சதீஷுக்கு நெருக்கமான நான்கு நண்பர்களில், ஒருவனது அம்மா படிப்பே முக்கியம். படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தனது மகனுக்கு ஊக்கம் அளிக்கிறார். இதற்கிடையே, நாயகி டெல்னா டேவிசுக்கு, சதீஷ் மீது காதல் வருகிறது. சிறுவயது முதலே சதீஷுடன் இருந்த ஈர்ப்பு பின்னர் காதலாக மாற, ஒருகட்டத்தில் இருவருமே காதலிக்க தொடங்கி விடுகின்றனர். அந்த காதலையும் தவறாக பயன்படுத்திவிடுகிறார் சதீஷ்.

தனது அன்னையின் பேச்சைக் கேட்டு படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த சதீஷின் நண்பன் கலெக்டராக வருகிறார். மறுபக்கத்தில் தனது அம்மாவால் பள்ளிப்படிப்பை தொலைத்து ஒரு ரவுடியாக மாறி நிற்கிறார் சதீஷ். இந்நிலையில், கொலை குற்றம் ஒன்றில் போலீசில் சிக்கிய சதீஷை என்கவுன்டர் செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் தனது நண்பனை காப்பாற்ற கலெக்டரான சதீஷின் நண்பர் முயற்சி செய்கிறார்.

கடைசியில் படிப்பை துளைத்த ஒருவர், படிப்புக்கு முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருவர் என இருவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு ரவுடியாக வலம்வரும் சதீஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரது பேச்சும், நடை, உடை பாவனைகள் என அனைத்திலுமே வடசென்னை இளைஞனாகவே வாழ்ந்த்திருக்கிறார். டெல்னா டேவிஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார்.

ரவுடி வாழ்க்கையை துறந்து நல்ல வாழ்க்கையை வாழ முயற்சி செய்து வரும் ரஞ்சித் படத்திற்கு பக்கபலமாக சிறப்பாக நடித்திருக்கிறார். வைதேகி, வடிவுக்கரசி, கயல் தேவராஜ் உள்ளிட்டோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

இரு இளைஞர்களின் வாழ்க்கை அவர்களது அம்மாவின் போதைனயால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை வடசென்னை சாயலில் சிறப்பாக இயக்கியிருக்கிறார் வேலுதாஸ் ஞானசம்பந்தம். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். படிப்பு என்பது எவ்வுளவு முக்கியம் என்பதை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்க எடுத்துக் கூற வேண்டும் என்பதை படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஈஸ்வரி புரொடக்‌ஷன் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவில் காட்சிகள் வடசென்னையை சுற்றி சுழன்றிருக்கிறது.

மொத்தத்தில் `ஆக்கம்’ கல்விக்கான ஏக்கம்.