அ அ அ – விமர்சனம்

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற வயதுவந்தோருக்கான காவியப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம் இது. சென்ற படத்தில் வரும் செங்கல் சைக்கோ என்ற கேரக்டருக்கான ப்ளாஷ்பேக்கை இந்தப் படத்தில் வைப்பதற்கு யோசித்த முயற்சியை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இத்யாதி, இத்யாதி விஷயங்களைப் பற்றி யோசிப்பதற்கும் பயன்படுத்திருக்கலாம் இயக்குனர். ‘அது எதற்கு ரிஸ்க்’ என்று அவர் யோசித்ததால், அந்த ‘ரிஸ்க்கை’ நாம் எடுத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

சிம்புவுக்குப் படத்தில் மூன்று கெட்டப், அதில் ஒரு கெட்டப் ‘வித்தியாசமான கெட்டப்’ ‘ என்று முடிவு செய்ததே போதும் என்று நினைத்திருப்பார்கள் போல சிம்புவும் ஆதிக்கும். ‘மதுரை மைக்கேல்’ கெட்டப்பில் டி.ராஜேந்தரையும், ‘திக்கு சிவா’ கெட்டப்பில் குறளரசனையும், ‘அஷ்வின் தாத்தா’ கெட்டப்பில் வி.கே.ராமசாமியையும் நினைவுபடுத்துகிறார் சிம்பு.

சிம்புவுக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை, எல்லாப் படங்களிலும் ‘காதல்ங்கிறது’ என்று ஆரம்பித்து இத்துப்போன வரையறைகளை அள்ளித் தெளிப்பது, ‘பொண்ணுங்க ஏமாத்துவாங்க, பசங்க பாவம்’ என்று ஆண்திமிருடன் கூடிய அட்வைஸ்களை வீசுவது என்று ரொம்பவே படுத்துகிறார். அதிலும் பெண்களை இழிவுபடுத்துவதற்காக பேசும் வசனங்கள், வைத்திருக்கும் காட்சியமைப்புகள், லாஜிக்குகள் எல்லாம் கீழ்த்தரத்திலும் கீழ்த்தரம். ஒரு பையன் தன் காதலியை ‘மேட்டருக்கு’ அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். ‘எக்ஸ் பாய்பிரென்ட்கிட்ட போனியே?” என்கிறான். “தோணுச்சு, போனேன். உன்கிட்ட தோணலை” என்கிறாள் அவள். உடனே காதலன் தற்கொலை செய்யப்போகிறான். ”இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். ஏமாத்திடுவாங்க. பசங்க பாவம், குதிக்காதீங்க எசமான் குதிக்காதீங்க” என்று வசனம் பேசி காப்பாற்றுகிறார் சிம்பு. நாம் முன்னால் இருக்கும் நாற்காலியில் தலையை முட்டிக்கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்?

படத்தில் மிக ‘புதுமையான’ ஒரு காதல் காட்சி உள்ளது. ஸ்ரேயா ரேஷன் கடையில் நிற்பார். அவரை ஒருதலையாகக் காதலிக்கும் ‘மதுரை மைக்கேல்’ சிம்பு பக்கத்து வரிசையில் நிற்பார். சிம்புவைத் தேடிவரும் விடிவி கணேஷிடம், “செல்வி என்னையவே பாக்குறா” என சொல்ல, அதை கணேஷ் நம்ப மாட்டார். “உனக்கு நான் நிரூபிக்கிறேன் பாரு” எனச் சொல்லி சிம்பு கொட்டாவி விடுவார். “இப்போ அவளும் கொட்டாவி விடுவா பார். அப்படி அவ கொட்டாவி விட்டா அவ என்ன லவ் பண்றானு அர்த்தம்”. சிம்புவின் கொட்டாவி ஹார்ட்டீன் போல பறந்து செல்ல, ஸ்ரேயாவின் கொட்டாவி அம்பு போல பறந்து சென்று ஹார்ட்டீனுக்குள் நுழையும். இந்தக் ‘கொட்டாவி’ காட்சியை ஒட்டுமொத்தப் படத்துக்கான குறியீடு என்றே சொல்லலாம்.

படத்தில் வாயோடு வாய் வைத்து உறிஞ்சும் ஏராளமான லிப்லாக் காட்சிகள் உண்டு. “ஆதிக் ரவிச்சந்திரனின் போன படம் ‘ஏ’ சர்ட்டிபிகேட் ஆச்சே. இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா என்று ரெண்டு ஹீரோயின்கள். ஏராளமான லிப் கிஸ் சீனா? அப்புறம் ஏன் ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுக்கலை?” என்று யோசிக்கிறீர்களா? சிம்புவும் மற்றவர்களும் லிப் லாக் அடிப்பதெல்லாம் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு. அதற்கான காரணம் ரொம்பவே ‘சிறப்பு’. சாதாரணமாகவே காமெடி என்ற பெயரில் முகத்தை அஷ்டகோணலாக்கி நம்மைப் படுத்தி எடுக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு லிப் லாக் சீன் என்றால்….? அடிக்கடி பாத்ரூமில் போய் வாஷ்பேஷினில் வாயைக் கழுவிவந்து உட்கார வேண்டியிருக்கிறது. சிம்பு, ஆதிக், உங்க டேஸ்ட் ஏன் இப்படிப் போயிடுச்சு?

தனித்தனியாகவே டபுள் மீனிங் டயலாக்குகளுக்குப் பெயர்போன சிம்புவும் ஆதிக்கும் இணைந்தால், கேட்கவா வேண்டும்? பாவமாய் இருக்கும் கஸ்தூரிப் பாட்டியே “ஜாக்கெட்டைக் கழட்டிக் கொடுடி” என்று ஸ்ரேயாவிடம் கிளுகிளுப்பு டயலாக் பேசுகிறார். ஒன்று டபுள் மீனிங் வசனங்களைப் பேசி சாவடிக்கிறார்கள், இல்லையென்றால் ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்று சிம்பு ஆரம்பித்துவிடுகிறார்,

யுவன்ஷங்கர் ராஜாவும்தான் என்ன செய்வார் பாவம், இந்தக் குரூர நாடகத்துக்கு எப்படித்தான் இசையமைக்க முடியும்? ‘இன்னைக்கு ராத்திரி மட்டும் லவ் பண்ணுடி’ என்று ஒரு பாட்டுக்கு இசையமைக்க வைத்து, அவரையும் பாவம், வக்கிரத்துக்குப் பலியாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காதல். சிம்பு, ஸ்ரேயா, தமன்னா தவிர இன்னும் நிறைய காதல் ஜோடிகள் உண்டு. மொட்டை ராஜேந்திரனுக்கு தமன்னா வீட்டு வேலைக்காரியுடன் காதல், கோவை சரளாவுக்கு சிம்பு மேல் காதல், விஜயகுமாருக்கு இளமையான பெண் மீது காதல், இவ்வளவு ஏன். கெஸ்ட்ரோலில் வரும் ஜி.வி.பிரகாஷுக்குக் கூட ஒரு லவ் ஃபெய்லியர் இருக்கிறது. பாவம் பாஸ், காதலைக் கொஞ்சநாள் விட்டுவிடுங்க!

சிம்பு அடிக்கடி பின்னந்தலையில் இருக்கும் முடியை இழுத்து, ‘சிறப்பு’ என்கிறார். ‘குஞ்ஞானி’ என்று பின்னந்தலையில் இருக்கும் சொற்ப முடியை இழுத்து, கோதிவிடும் ஓமக்குச்சி நரசிம்மன் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறார். “நான் மோசமானவன் தான், ஆனா கேவலமானவன் இல்லை” என்று கேவலமான (அ) மோசமான டயலாக் ஒன்றைச் சொல்கிறார் சிம்பு. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் நியாயமாரே!) படத்தில் வில்லனை சிவாஜி கெட்டப்பில் அலையவிட்டு, கண்களை உருட்ட வைத்து, சிவாஜியைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், காதலைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், முதுமையைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், சினிமா என்ற கலை ஊடகத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்கள் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும்.

இப்படி ஒரு படத்தைக் கொடுத்து பார்வையாளர்களைப் பதம் பார்த்ததோடு இல்லாமல், ஓவர் தைரியத்தோடு ‘பார்ட் டூ’ என்று லீடு கொடுக்கிறீர்கள் பாருங்கள், நீங்கள் அடங்காதவர்களோ அசராதவர்களோ இல்லை, கொடூரமானவர்கள் பாஸ்… கொடூரமானவர்கள்!