“கீழடியில் பிடிமண் எடுத்தது பிற்போக்கா?”

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், ஜூன் 26 அன்று சென்னையில் நடத்தும் “தமிழர் உரிமை மாநாட்டுக்கு” கீழடியிலிருந்து பிடிமண் எடுக்கப்ப்பட்டு, அது மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளோடு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மிகுந்த உற்சாகத்துடன் அனைத்துப் பகுதிப் பொதுமக்களும் இநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். மத்திய பாஜக அரசின் சதிகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப இந்நிகழ்வு பயன்பட்டுள்ளது.

ஆனால், முற்போக்கு என்று பேர் வைத்துக்கொண்டு ஒரு இந்து மதச் சடங்கான பிடிமண் எடுத்தலை நீங்கள் எப்படி கைக்கொள்ளலாம் என்கிற கேள்வி முகநூல் பக்கங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களிலிருந்து மொழிச்சுடர் எடுக்கும் நிகழ்வும் இதே நேரத்தில் நடக்கிறது. அதுவும் ஒரு சடங்கு தான். அதை யாரும் கேள்வுக்கு உட்படுத்தவில்லை. பிடிமண் எடுக்கும் நிகழ்வை நாடகீயமாக நிகழ்த்தும் வடிவத்தில் நாட்டுப்புற சாமியாடிகள் / கோடாங்கிகள் கோலத்தில் இரண்டு பேர் செவ்வாடையும், காவி ஆடையும் அணிந்து பங்கேற்றது ஒருவேளை கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கலாம்.

முதலில் இந்து மதத்தில் பிடிமண் எடுக்கும் நடைமுறை கிடையாது. ஆகவே இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு. நாட்டுப்புற தெய்வங்கள் கடவுளர் அல்லர். வாழ்ந்து மறைந்த மனிதர்கள், மனுஷிகள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்கள் எல்லோருமே சாதி மறுத்த காதலுக்காகவோ பாலியல் வல்லுறவிலிருந்து தப்பிப்பதற்காகவோ கொல்லப்பட்டவர்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள். நேற்றைய இளவரசனும், கோகுல்ராஜும் தான் மதுரை வீரனும், முத்துப்பட்டனும், காத்தவராயனும் என்று புரிதல் வேண்டும். இவர்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இவர்களை கொலையில் உதித்த தெய்வங்கள் என்பார்.

இத்தெய்வங்களை சிறுதெய்வங்கள் என்று இழிவாகப் பேசிய (சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்) சைவமும் வைணவமும் அத்தெய்வங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைக் கண்டு தங்கள் மத அரசியல் பரப்பலுக்காக அம்சங்கள், அவதாரங்கள் என்கிற தத்துவங்களை உருவாக்கி சிவபெருமானின் அம்சம்தான் சுடலைமாடன் என்பதாக உழைப்பாளி மக்கள். படைத்த இந்த சனங்களின் சாமிகளை கபளீகரம் செய்தார்கள். வறட்டு நாத்திகம் பேசிய நாம் சனங்களின் சாமிகளை மதவாதிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம்.இன்றும் கிராமக் கோயில் பூசாரிகள் சங்கத்தை விஸ்வஹிந்து பரிஷத்காரன் தான் லபக்கியுள்ளான்.

நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி   என்றொரு சிறு நூலைப் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதினேன். அவர்களோடு நாம் தேவை அடிப்படையில் ஒரு கூட்டணி  வைக்கலாம் என எழுதினேன். அத்தெய்வங்களில் பெரும்பாலானவை சாதிகளோடு இறுக்கமாக பின்னப்பட்டிருப்பதால் அத்திசையில் பயணிப்பதிலும் சிக்கல் உள்ளது. நாட்டுப்புற தெய்வங்கள் குறித்து அறிஞர்கள் நா.வா, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், கோ.கேசவன், அருணன், டி.தருமராஜ் எனப் பலரும் காத்திரமான நூல்களை வழங்கியுள்ளனர். அவை தரும் வெளிச்சத்தில் என்னுடைய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்கிற சிறு நூலும் வந்துள்ளது. ஆகவே நாட்டுப்புற வழிபாட்டு மரபிலிருந்து நாம் எதையேனும் எடுக்கும்போது எச்சரிக்கை வேண்டும். ஒவ்வாமை தேவையில்லை. இஸ்லாமிய தர்காக்களும், கிறித்துவ குருசடிகளும் புனிதர்களின் கோவில்களும் நாட்டுப்புற தெய்வங்களே ஆகும்.

தான் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத் தேடி வெளிச்செல்லும்போது. தன் முன்னோர்களை வணங்கி அவர்களின்  காலடியிலிருந்து பிடிமண் எடுத்துச்செல்வது நாட்டார் மரபு; அது அவர்களின் மண்ணுரிமையோடு  சேர்ந்தது என தோழர் ஆர்.நல்லக்கண்ணு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார். ஆதவன் தீட்சண்யா தன்னுடைய ஒரு கவிதையில் சொன்னது போல “என்னைக் கருவுற்றிருந்தபோது என் தாய் தெள்ளித் தின்ற மண்ணைத் தவிர. இப்பரந்த தேசத்தில் எங்கள் மண் எது?” என்கிற வரிகளோடு இணைத்துப் பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  இந்தப் பிடிமண்ணைத் தவிர வேறேதும் இல்லை இந்த தேசத்தில்.அந்தப் பிடிமண்ணைத் தான் நாம் கீழடியில் எடுத்திருக்கிறோம். அந்த மண்ணையும் அதானிகள் விழுங்குமுன்  அரசு கையகப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்காக தலைநகருக்கு எடுத்துச் செல்கிறோம்.

தந்தை பெரியார் சொன்னார்: “அர்த்தம் அறியாமலும் அவசியம் இல்லாமலும் செய்யப்படும் காரியங்களே மூடச் சடங்குகள்” நாம் பிடிமண்ணின் அர்த்தம் அறிந்து ஒரு அவசியத்தின் அடிப்படையில்  ஒரு நிகழ்த்துகலையாக மக்களின் கவனத்தை ஈர்க்கவே பிடிமண் எடுத்து வருகிறோம்.எந்தக் குழப்பமும் இல்லாமல் நம் பயணம் தொடரும்.

ச.தமிழ்ச்செல்வன்

மாநில பொதுச்செயலாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்