கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் தொடர்பா?: சின்னத்திரை நடிகைகள் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் சின்னத்திரை நடிகைகள் ஜனனி அசோக்குமார், ஷபானா ஷாஜஹான் ஆர்யன் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்த விவகாரத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகைகள் ஜனனி அசோக்குமார், ஷபானா ஷாஜஹான் ஆர்யன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அப்போது, அத்துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சின்னத்திரை நடிகைகள் இருவருக்குத் தொடர்பு இருப்பதாக எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக, நடிகை ஜனனி அசோக்குமாரின் பெயர் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டது. இதனால், ஜனனி அசோக்குமார் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகரித்தது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடிகைகளுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, தனது பெயர் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்து நடிகை ஜனனி அசோக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிப் பல்வேறு தவறான தகவல்களும் குற்றச்சாட்டுகளும் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரூ.634 கோடி மோசடி தொடர்பான விவகாரத்துடன் எனது பெயர் இணைத்துப் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகிறேன். எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததில்லை. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்புறவும் கிடையாது.

உண்மைகளைச் சரிபார்க்காமல், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்காமல், ஆதாரங்களை முன்வைக்காமல் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை எவ்வாறு வெளியிடவும், பரப்பவும் முடிகிறது, இதில் என்ன நியாயம் இருக்கிறது, பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, யாருடைய ஆதரவுமின்றி எனது வாழ்க்கையையும் தொழிலையும் நானே உருவாக்கியுள்ளேன். இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றன. ஒரு பெண்ணின் மீது உண்மைகளை ஆராயாமல் எளிதில் குற்றம் சுமத்தும் சமூகச்சூழல் வேதனையளிக்கிறது.

எனவே, என்னைப் பற்றிய தவறான தகவல்களை வெளியிடுவதையும் பகிர்வதையும் ஊடகங்களும் பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்துடன் எனது பெயரைத் தவறாகத் தொடர்புபடுத்தும் பதிவுகளை நீக்க வேண்டும். ஒரு குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகாது. உண்மைகளையும் ஆதாரங்களையும் உறுதிப்படுத்திய பின்னரே செய்திகள் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷபானா ஷாஜஹான் ஆர்யன்:

தனக்கு எதிராக பரப்பப்படும் குற்றச்சாட்டை மறுத்து சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜஹான் ஆர்யன் தெரிவித்திருக்கும் விளக்கம் வருமாறு:

கடந்த இரண்டு நாட்களாக, ஒரு முக்கிய அரசியல்வாதி தொடர்புடையதாகக் கூறப்படும் ₹634 கோடி விவகாரத்துடன் இணைத்து யூடியூப் (YouTube), எக்ஸ் (X), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) எனது பெயரும் புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தக் கூற்றுகள் மிகவும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதலாக மாறி வருகின்றன; மக்கள் என்னிடம் இதற்கான விளக்கம் கேட்டு வருகின்றனர்.

என்னிடம் விளக்கம் கேட்கப்படுவதற்கு முன்பு, நான் கேட்க விரும்பும் சில கேள்விகள் இதோ:

பேசப்பட்டு வரும் ஆவணத்தில் எனது பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது? இந்த விவகாரத்துடன் என்னை இணைக்கும் சரிபார்க்கப்பட்ட ஆதாரம் என்ன?

முதலில் எனது பெயரை இதில் இணைத்தது யார், எந்த அடிப்படையில்? பல சமூக வலைதளப் பக்கங்கள் ஒரே மாதிரியான குறிப்புகளுடன் (captions) இதே குற்றச்சாட்டுகளை ஏன் திரும்பத் திரும்பப் பகிர்கின்றன?

இந்தக் குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்களிடம் அவற்றின் மூலம் (source) என்னவென்று கேட்கப்படாத நிலையில், நான் மட்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கப்படுகிறது?
என்னை இழிவுபடுத்துவதாலும், ஒழுக்கக்கேடானவள் என அவதூறு பேசுவதாலும் (slut-shaming) என்ன நிரூபிக்கப்படுகிறது?

என்னைக் குறித்து வெளியிடப்படும் பாலியல் ரீதியான மற்றும் அவதூறான ‘மீம்ஸ்கள்’ (memes) மற்றும் பதிவுகள் தரக்குறைவானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு தனிநபர் மீதான கடுமையான தாக்குதல் இது.

இந்தப் பொய்களை அவசர அவசரமாக வெளியிட்டு, பகிர்ந்து, இதன்மூலம் பணம் ஈட்டத் துடித்தவர்களுக்கு:

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என உங்களுக்குத் தெரியவந்தால், அவற்றை எவ்வளவு பகிரங்கமாகப் பகிர்ந்தீர்களோ, அதே அளவு வெளிப்படையாகத் திருத்திக் கொள்வீர்களா? எனது பெயரைக் களங்கத்திலிருந்து மீட்டெடுக்க இதே அளவு முயற்சி செய்வீர்களா? அல்லது அடுத்த விவகாரத்தை நோக்கி சாதாரணமாகக் கடந்து சென்று விடுவீர்களா?

ஒவ்வொரு மணிநேரமும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் வலுத்துக்கொண்டே செல்கின்றன. என் மீது அக்கறை கொண்டு என்னைத் தொடர்புகொண்ட அனைவருக்கும் இந்த விளக்கத்தைப் பகிர்கிறேன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை!

எனது சுயமரியாதையை யாரிடமும் யாசித்து நிற்பதற்காக நான் இங்கு வரவில்லை. அதைத் தருவதற்கோ அல்லது பறித்துக்கொள்வதற்கோ உங்களுக்கு எந்த உரிமையும் இருந்ததில்லை.

நான் யார் என்பது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நன்றாகத் தெரியும்; அது மட்டுமே முக்கியமான உண்மை.

இவ்வாறு நடிகை ஷபானா ஷாஜஹான் ஆர்யன் கூறியுள்ளார்.