தவறு என்று ஒரு ஆசிரியர் சுட்டிக்காட்டும் போதும் மற்றவர்களுக்கு இது உறைக்காதது ஏன்?
அரசுப் பள்ளியில் கர்மா, முற்பிறவி, பாவ, புண்ணியம் பற்றியெல்லாம் பேசிய இந்தத் தம்பியிடம் அன்பான அணுகுமுறை இல்லை.
நான் கோபப்படவில்லை என்றபடி கோபப்படுகிறார். விவாதம் செய்யாமல் குரலுயர்த்தி ஆத்திரப்படுகிறார்.
நான் எந்தக் குறிப்பிட்ட மதத்தைப் பற்றியும் பேசவில்லையே என்கிறார்.
தம்பி, மறு ஜென்மம், கர்மா இவற்றை இஸ்லாம், கிறிஸ்தவம் ஏற்பதில்லை. இந்து, சீக்கியம், பெளத்தம், ஜைனம் இந்த மதங்கள்தான் ஏற்கின்றன.
பாவ,புண்ணியம் தெரிந்தால்தான் வாழ முடியும் என்கிறார்.
இதெல்லாம் அவர் நடத்தும் ஆஸ்ரமத்தில் அவரை நம்பி ஆப்பிள் வாங்கி, காலில் விழும் கூட்டத்தினர் மத்தியில் பேச வேண்டும். பள்ளியில் அல்ல!
மாணவர்களுக்குத் தேவையான ஆன்மிகத்தை யார் சொல்லிக் கொடுப்பது என்று சீறுகிறார். அதற்கு அவர்களைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள் தம்பி. அவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.
மாணவப் பருவத்தில் தேவை சுய முன்னேற்றத்திற்கான வழி காட்டல்களும், தன்னம்பிக்கைப் பெருக ஊக்கமும், பாடங்கள் தவிர உலக அறிவும்தான்.
இவர் இதைத்தான் பேசப்போகிறார் என்று அறிந்தே அழைத்திருந்தால் இதில் அழைத்தவர்களுக்கும் பங்குள்ளது.
தவிரவும்.. ஒரே ஒரு ஆசிரியர் தவறு என்று சுட்டிக்காட்டும்போதும் மற்றவர்களுக்கும் இது உரைக்காதது ஏன்? இணைந்து கண்டித்திருக்க வேண்டும். அதை விடுத்து கேள்வி கேட்ட ஆசிரியரை சமாதானப்படுத்தியது சகிக்கவில்லை.
–பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்
(முகநூல் பதிவு)