சிட்டுக்குருவிகள் இல்லாத உலகம் வாழத் தகுதியற்றது!

“சிட்டுக்குருவி பிரச்சாரம் (Great Sparrow Campaign)”…

மேலே உள்ள வரியை படித்தவுடன் ஏதோ சிட்டிக்குருவியை பாதுகாப்பதற்கான பிரச்சாரம் என்று நினைத்துவிட வேண்டாம்.

நெடும்பயணம் கடந்து, மிகப்பெரிய மக்கள் புரட்சி நடந்து 1950களில் சீனாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த மாவோ, 1958 ஆம் ஆண்டு “பெரும் பாய்ச்சல்” (Great Leap Forward) என்கிற திட்டத்தை அறிவித்தார். அதில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விசயங்கள் இடம் பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக நிலம் அரசுக்குதான் சொந்தம் என்றும், மக்கள் உணவு உற்பத்தியில் பணியாற்றலாம் என்றும் ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிவிக்கிறார்.

பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருந்தாலும் அந்த காலகட்டத்தில் சூழல் மண்டலம் குறித்த பார்வை இல்லாதால், ஒரு மிகப்பெரிய கேடுவிளைவிக்க கூடிய திட்டத்தை அறிவிக்கிறார். அந்த திட்டத்தின் பெயர் “four pests campaign”. அதாவது தேவையற்ற பூச்சிகளாக கருதப்பட்டவற்றை அழிப்பது. அந்த நாலில் சிட்டுக்குருவியும் ஒன்று.

சிட்டுக்குருவிகள் மக்களுக்காக விளைவிக்கப்படும் தானியங்களை உண்டுவிடுகின்றன என்று கருதிய சீன அரசாங்கம் சிட்டுக்குருவிகளை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்டது தான் “சிட்டுக்குருவி பிரச்சாரம்”.

அடுத்த 2-3 வருடங்களில், சிட்டுக்குருவிகளை அழிப்பதற்காக மக்கள் பல்வேறு உத்திகளை கையாள தொடங்கினார்கள், குருவிகளின் கூட்டை அழிப்பது, முட்டைகளை உடைப்பது, பெரும் ஒலி எழுப்பக்கூடிய இசைக்கருவிகளை அடித்து பறவைகளை நெடுந்தூரத்திற்கு விரட்டுவது என்று மக்கள் இறங்கி விளையாடினார்கள்.

சிட்டு குருவிகள் பல்வேறு நாடுகளின் தூதரகங்களின் கட்டிடங்களில் “தஞ்சம்” புகுந்தாலும் தூதரகங்களுக்கு வெளியே நின்று மக்கள் கொட்டடித்து அவற்றை விரட்டி கொன்று குவித்தார்கள். அதிகமான குருவிகளை கொன்றவர்களுக்கு அரசு பரிசுகளை வழங்கியது.

சீனா முழுவதும் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கைகளில் மிகவும் குறைந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்தது, கொன்று குவித்த பிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது, சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை மட்டும் உண்ணவில்லை,  பல்வேறு பூச்சிகளை அவை சாப்பிட்டன என்றும் சிட்டுக்குருவிகள் இல்லாதலால் “வெட்டுக்கிளி” போன்ற பூச்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து, அவை மனிதர்களுக்கு தேவைப்படும் உணவை அழித்தன என்றும்.

1960களின் தொடக்கத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட, இரண்டும் சேர்ந்து மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு சுமார் நான்கு கோடி மக்கள் பட்டினியால் உயிர் இழந்த சோகம் சீனாவை உலுக்கியது. இதை அறிந்துகொண்ட சீன அரசு அழிக்கப்படவேண்டிய பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியை நீக்கிவிட்டு “மூட்டைப்பூச்சிகளை” அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டதுதான் பெரிய முரண்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம், சிட்டுக்குருவிகள் இல்லாத உலகம் வாழத் தகுதியற்றது என்பதற்கு சீன அரசு எடுத்த முடிவுகள் ஒரு சான்று.

சிட்டுக்குருவிகளை காப்பது, ஒரு உயிரினத்தை காக்கும் செயல் அல்ல. அது நமது எதிர்காலத்தை, நமது சந்ததியினரை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கை.

SUNDAR RAJAN