இயற்கை சமநிலை வரும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது!

நான் பூமி பேசுகிறேன். இன்று (ஏப்ரல் 22 ) உலக பூமி தினமாம்..

One two three.. சோப்பு டப்பா free…

-இப்படி ரைமிங்கா சொல்லி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பூமி பேச ஆரம்பத்தது.. நம்மவர்கள் free free என்று சொல்லித்தான் இந்த பூமியை சற்று மோசம் செய்து வைத்துள்ளனரே..

கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உலகில் 900 கோடி மனிதர்களுக்கும், கணக்கிட முடியாத ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருகிறது இந்த பூமி. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் எந்த கோள்களிலும் இல்லாத உயிர்கள் வாழக்கூடிய தனி சிறப்பு இந்த பூமிக்கு மட்டுமே உண்டு. ஆனால், நாம்தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே!அப்படித்தான் பூமியையும் நாம் மறந்தே போனோம். அதனை நினைவில் நிறுத்தத்தான் இன்று அனுசரிக்கப்படுகின்றது “உலக பூமி தினம்”. 1970 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வினை நிச்சயம்:

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும். இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது.

மறந்துபோன இயற்கை:

இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது.

“ஒருநாள்”தான் ஒதுக்குகிறோம்:

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒருவிதமான கவர்ச்சி தேவைப்படுகிறது. நம்மை தாங்கிக்கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு ” உலக பூமி தினம் ” என்று ஒருநாள் தேவைப்படுகிறது .

காயப்படும் பூமி:

பூமியின் முதல் எதிரி யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம்.

எதிரான அறிவியல்:

இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும். இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும், பெரிய தீமையையும் கொண்டிருக்கும்.

பூமி எனும் குப்பைத்தொட்டி:

நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை. நமது பயன்பாடும், வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. விளைவு, பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம்.

பயன்படுத்து – தூக்கி எறி:

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை? சொல்ல போனால் மிகவும் குறைவு. “பயன்படுத்தியபின் தூக்கி எறி” கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது. நிலம், நீர், காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது.

குப்பை வாழ்க்கை:

நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம். நம் வீட்டில் இருப்பது மட்டும் குப்பையல்ல. பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது குப்பைதான். அதற்கு நாம் மட்டுமே காரணம்.

குறையுங்கள் குப்பைகளை:

சரி எப்படி பூமியை பாதுகாப்பது என்று கேட்கிறீர்களா? பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் குறையுங்கள்.

முடிந்தவரை உபயோகியுங்கள்

நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ அல்லது மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .

மீண்டும் உருவாக்கு:

மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும். அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .

இயற்கையை சேமிப்போம்:

இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை வரும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது

கடைசியில் நரகம்தான்:

முடிந்த அளவுக்கு மேற்கண்ட செயல்களை நம் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் சூரியன் சுட்டெரித்து நாமெல்லோரும் நரகத்திற்குத்தான் போக வேண்டும். அதற்குள் பூமியே நரகமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.

புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது என்பதே இந்த புவி தினத்தின் முக்கிய கருதுகோளாகும்.

தகவல்நன்றி: து.வெங்கடேஷ், இவப

(Shared from POOVULAGIN NANBARGAL)