“தோழரே… நீங்கள் லெனினை பார்த்திருக்கிறீர்களா…?”

Lenin in October என ஒரு படம். ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் லெனினை பற்றி சோவியத் யூனியனில் எடுக்கப்பட்ட படம். அதில் பல சிறப்பான காட்சிகள் உண்டு. அவற்றில் முக்கியமான காட்சியைதான் இங்கு புகைப்படங்களாக்கி இருக்கிறேன்.

முதலாளிய கட்சிகளின் கூட்டில் நடந்த பிப்ரவரி புரட்சியிலும் சமத்துவம் மலராது என்கிற நிலையில் மக்கள் ராணுவம் மற்றும் செஞ்சேனை கொண்டு அக்டோபர் புரட்சி நடக்கும். ஸ்டாலினும் ட்ராட்ஸ்கியும் லெனினின் உத்தரவின் பேரில் அரண்மனையை கைப்பற்றி இருப்பார்கள். ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட பிறகு லெனின் உரையாற்றுவார் என செய்தி கசிந்திருக்கும்.
உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தை கட்டமைக்கும் தலைவனை பார்க்க உழைக்கும் வர்க்கத்தினரும் அரண்மனைக்குள் சென்றிருப்பார்கள். லெனினை முன் பின் பார்த்ததில்லை. எழுத்துகள் மட்டும்தான் அறிமுகம். அந்த பெருந்தலைவனை பற்றிய பல கற்பனைகளோடு ஒரு கிராமவாசியும் வந்திருப்பார். மாறுவேடத்தில் இருக்கும் லெனினுடனேயே அவர் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
“தோழரே நீங்கள் லெனினை பார்த்திருக்கிறீர்களா?”
“இல்லையே.. ஏன்?”
“அவர் இங்கிருப்பதாக சொல்கிறார்கள்”
“நிச்சயமாக இருப்பார்’
“நான் அவரை பார்க்க விரும்புகிறேன். நண்பர்களுடன் ஒரு விவாதம் வந்தது. லெனின் செந்நிற முடியும் தழும்புகளுடன் இருப்பார் என சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அநேகமாக அவர் பெரிய தலையுடன் கம்பீரமான பெரிய தோற்றத்தில் இருப்பார் என எண்ணுகிறேன்.”
“அவர் உருவத்தை திட்டவட்டமாக எனக்கு சொல்லத் தெரியவில்லை” – என கேமரா பக்கமாக திரும்பி லெனின் புன்னகைப்பார். பிறகு அங்கிருந்து எழுந்து சென்று விடுவார்.
மக்கள் கூடியிருக்கும் ஒரு அரங்கம். உலகின் மாபெரும் புரட்சியை கட்டியமைத்த நாயகனுக்காக கூட்டம் காத்திருக்கிறது. திடுமென கதவு திறக்கப்படுகிறது. புடைசூழ ஒருவர் கூட்டத்துக்கு இடையே நடந்து செல்கிறார். அவரை பார்க்க முடியவில்லை. அதற்குள் சென்று மேடையேறி விடுகிறார். மக்களை பார்த்ததும் பேசத் தொடங்குவார். மக்கள் அவரின் பேச்சில் தொலைவார்கள். தங்களின் வாழ்க்கைகளின் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கண்கள் முன் விரியவிருக்கும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து திளைப்பார்கள். அரங்கமே அதிரும் வகையில் கோஷமும் கைதட்டலும் நிறையும்.
ஓர் அற்புதமான பொன்னுலகத்துக்கான ஆரம்ப நிமிடங்கள் பூரிப்புடன் அரங்கை நிறைத்திருக்கும். அப்போது கூட்டத்தை விலக்கி ஒரு தலை முன்னே வருகிறது. லெனினை காண விரும்பிய கிராமத்துவாசி. மேடையில் நிற்கும் லெனினை பார்க்கிறார். சட்டென புன்னகைத்து, “நம்மை போலவே சராசரி மனிதராகத்தான் இருக்கிறார்” என உற்சாகம் கொள்வார்.
இத்தகைய காட்சியை வீரப்பன் மற்றும் ராபின்ஹுட் கதைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். மாறுவேடத்தில் இருக்கும் நாயகனை பற்றி நாயகனிடமே விசாரிப்பது போல் காட்சி அமைந்திருக்கும். மக்களின் கருத்தை கேட்ட ராபின்ஹுட் நாயகன், பிறகு மாறுவேடத்தை கலைத்ததும் அசகாயத் தன்மை நிறைந்த தலைவனாக தெரிவான். மக்கள் அவனுடைய அசகாயத்தின் முன் மனமுவந்து தாழ் பணிவார்கள்.
இப்படத்தில் உள்ள வித்தியாசமே லெனினும் சாமானியர் எனக் காட்டியிருப்பதுதான். தனித்தன்மை, அசகாயம், தலைவருக்குரிய தன்மை எதுவும் இல்லாத இயல்பான மக்களையே தலைவர்களாக கொள்ளும் சித்தாந்தம் கம்யூனிசம்தான். மேலிருந்து கீழே பார்க்கும் தன்மை கிடையாது. கீழிருந்து மேலாக பார்த்து பூஜிக்கும் தன்மையும் கிடையாது. அதுவே சமத்துவம். அதுவே கம்யூனிசம். அதுவே லெனினியம்.
லெனின் வேறு யாருமல்ல, பாசாங்கற்ற முழுமையான அடிப்படை மாற்றத்தை விரும்பிப் போராடும் நாம் அனைவரும்தான்.
(தோழர் லெனின் பிறந்த நாள் இன்று)
RAJASANGEETHAN