“வித்தையடி நானுனக்கு’: இது யாரை பற்றிய கதையும் அல்ல!”

“நான் ‘வித்தையடி நானுனக்கு’ படத்தை சில முக்கிய திரைத்துறை புள்ளிகளிடம் போட்டுக் காண்பித்தபோது, அவர்கள் ‘இந்த படம் இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கபட்டது தானே?’ என்று கேட்டார்கள். நான் திரைப்படங்கள் மட்டும்தான் பார்ப்பவன். எடுத்தவர்களின் கதை எனக்கு தேவையில்லாதது. அதனால் நான் சொன்னேன்: ”நீங்கள் சொன்ன இன்னாரின் கதை எனக்கு தெரியாது. இது யாரை பற்றிய கதையும் இல்லை. ஒரு சாதாரணமான, தமிழ் படம் தான்” என்று பேச ஆரம்பித்தார் இயக்குனர் ராமநாதன்.கே.பி.

‘வித்தையடி நானுனக்கு’ படம் பற்றி கேட்டபொழுது, “இந்த படத்தின் கதைகளத்திற்கு இரண்டே கதாபாத்திரங்கள் மட்டுமே தேவைபட்டன. அதனால் இரண்டே பேரை வைத்து படத்தை முடித்துவிட்டேன். இதில் பெரும் சவாலாக இருந்தது திரைக்கதை அமைப்புதான்.  வீட்டைவிட்டு ஓடிவந்த ஒரு இளம்பெண். அவள் கார் நடுவழியில் நின்றுபோக, ஒரு நடுத்தர வயது ஆண் உதவிக்கு வருகிறார். படம் முழுக்க அவர்களுக்குள் நடக்கும் போராட்டம்தான் கரு. இதை வைத்து காதல் கதை பண்ணலாம், காமெடி கதை பண்ணலாம், ஏன்… பேய்கதையாக கூட பண்ணலாம். ஆனால் நான் இதை ஒரு சைக்கொலாஜிக்கல் திரில்லராக, முந்தைய ஹாலிவுட் க்ளாஸிக் ஸ்டைலில் செய்திருக்கிறேன். அதனால் சற்று நிதானமாகவும், இண்ட்ரஸ்டிங்காகவும் படம் போகவேண்டும். அது மட்டும்தான் சற்று கடினமாக இருந்தது.

“15 நாள் ஷூட். படத்தை முடித்து வந்துவிட்டோம். என்றாலும் நாங்கள் ஒரு மாதம் முழு மூச்சாக ஒத்திகை பார்த்து, காமிரா கோணங்களிலிருந்து மனப்பாடம் செய்து சென்றோம். ஆங்கிலத்தில் நியோ நொயர் என்று ஒரு ஜானர் இருக்கிறது. அதை முழுவதுமாக சாராமல், சற்று தட்டி கொட்டி தமிழ்ப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். மற்றபடி இது ஒரு தமிழ் படம். ’வித்தியாசமாக’, ‘முதன்முறையாக’ என்ற பெரும் வார்த்தைகள் இதில் இல்லை. இந்த முயற்சி ஆங்கிலத்தில் நிறைய செய்திருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன் ‘ஸ்லூத்’ (SLEUTH) என்று ஒரு படம், இருவர் மட்டுமே நடித்தது. ‘கலெக்டர்’ என்று மற்றுமொரு படம், 1930களில் என நினைக்கிறேன். அன்றே முயற்சி செய்திருக்கிறார்கள்” என்று நீளமாக பதில் சொன்னார்.

இந்த படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அவர் சற்று சிரித்துவிட்டு, “பெரிசா மெசேஜ் சொல்லும் அளவுக்கு நாங்க இன்னும் வளரல சார்…. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல் கண்டிப்பா கொடுக்கும்னு நம்பறேன். ஏன்னா, ஜெனரலா ஒரு நல்ல படம்னு எதை சொல்லுவோம்? படம் பார்த்து முடித்து வெளியே வந்த பிறகும் படத்தின் தாக்கம் கொஞ்ச நேரம் தொடரும். அதை நாங்கள் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறோம் என்று நம்பறோம்.

“மற்றபடி இந்த படத்துல ஹீரோ, ஹீரோயின்னு இல்லாமல், இரு கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இளம்பெண்ணாக நடித்த சவுரா ஸயித் மிக யதர்த்தமாகவும் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். ராஜேஷ் கடம்கோட் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்க, இசை விவேக் நாராயண். மிக சிறப்பாக ரி-ரிகார்டிங் செய்திருக்கிறார். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸின் செல்வக்குமார் என் கூடவே இரவு பகல் பாராமல் இருந்து படத்தை துரிதமாக முடிக்க உதவியிருக்கிறார்.

“இந்த படத்தில் முக்கியமாக மகாகவி பாரதியின் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. ‘பாயும் ஒளி நீயெனக்கு’. அதன் கடைசி வரி “வித்தையடி நானுனக்கு’ தான் படத்தின் பெயர். இந்த பாட்டை வேறுவிதமாக டியூன் போட்டு மேற்கத்திய இசை வண்ணம் பூசியிருக்கிறோம். L9 மற்றும் ISR Ventures இணைந்து தயார் செய்திருக்கிறார்கள். படம் ஜூன் 10 ஆம் தேதி வெளிவரயிருக்கிறது” என்றார்.