‘விசாரணை’ விமர்சனம்

“போலீஸ் – உங்கள் நண்பன்” என்றும், அப்பாவிகளை காப்பாற்றுவதற்காகவும், நீதி நேர்மையை நிலைநாட்டுவதற்காகவும் தான் காவல்துறை இருக்கிறது என்றும் பசப்பும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி போன்ற சமூக விரோதிகளின் செவிட்டில் அறையும் விதமாய் வெளிவந்திருக்கிறது ‘விசாரணை’.

அப்பாவிகளுக்கு எதிராக பொய் வழக்கு போடுவது, அவர்களை அடித்து உதைத்து நார் நாராய் கிழிப்பது, லாக்கப்பில் சித்ரவதை செய்து கொன்றொழிப்பது, ‘என்கவுண்ட்டர்’ என்ற பெயரால் போலி என்கவுண்ட்டர் நடத்தி சத்தியத்தின் வாயை அடைப்பது என்பவை எல்லாம் யாரோ ஒரு போலீஸ் அதிகாரியாலோ, எங்கோ ஒரு போலீஸ் நிலையத்திலோ நடப்பவை அல்ல; போலீஸ் இழைக்கும் கொடுமைகள் அனைத்தும் நிறுவனமயமாக்கப்பட்டு, காவல் துறையில் ஓர் அங்கமாக ஆக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை, கலைந்யம் கெடாமல் சொல்லியிருக்கிறது ‘விசாரணை’.

தமிழ்நாட்டைவிட்டு ஓடிப்போன ‘அட்டகத்தி’ தினேஷ், ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் தங்கிக்கொண்டு, புரொவிஷனல் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அவர் தங்கியிருக்கும் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதை அடுத்து, தினேஷையும், அவரது 3 நண்பர்களையும் குண்டூர் போலீசார் பிடித்துச்சென்று, போலீஸ் நிலைய லாக்கப்பில் வைத்து, திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி, பார்ப்பவர் மனம் பதறுமளவுக்கு பயங்கரமாக அடித்து, உதைத்து, வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு கொடூரமாக சித்ரவதை செய்கிறார்கள்.

தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டரான சமுத்திரக்கனி, தினேஷ் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு, தன்னுடன் காரில் அழைத்து வருகிறார். வழியில் ஒரு நண்பன் இறங்கிக்கொள்ள, தினேஷ் உள்ளிட்ட இதர மூவருடன் சென்னை போலீஸ் நிலையத்துக்கு வருகிறார். நண்பர்களை போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு போங்கள் என்று கூறுகிறார்.

தினேஷூம் அவரது நண்பர்களும் போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்கையில், அங்குள்ள லாக்கப்பில் போலீஸ் அதிகாரி அடித்து நொறுக்கியதில் ஆடிட்டரான கிஷோர் உயிரிழக்கிறார். இந்த லாக்கப் மரணத்தை மறைக்க, “தற்கொலை” என பொய்யாய் ஜோடிக்கிறது போலீஸ்.

ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது தினேஷூக்கும் அவரது நண்பர்களுக்கும் தெரிந்துவிடுவதால், அந்த அப்பாவிகளின் வாயை அடைக்க, அவர்களை போலி என்கண்ட்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்கிறது போலீஸ். இதை அறிந்த தினேஷூம், அவரது நண்பர்களும் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள். அவர்களை சமுத்திரக்கனி உள்ளிட்ட போலீசார் துப்பாக்கி சகிதம் துரத்துகிறார்கள்.

தினேஷும் அவரது நண்பர்களும் உயிர் தப்பினார்களா? அல்லது போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்களா? என்பது கிளைமாக்ஸ்.

குக்கூவில் கண் வலியை பொறுத்துக்கொண்டு நடித்த அட்டக்கத்தி தினேஷ் இதில் உடல் வலியை பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். திரையில் இவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு வலிக்கிறது, இவர் பயப்படும் பொழுதெல்லாம் நமக்கு அச்சம் தொற்றிக்கொள்கிறது அந்த அளவிற்கு தன் நடிப்பின் மூலம் உணர்வுகளை கடத்துகிறார்.

ஆடுகளம் முருகதாஸ் வெறும் நகைச்சுவைக்கு மட்டும் என்றில்லாமல், ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்த அழுத்தமான காட்சிகளில்கூட சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார்.

சமீபகாலங்களில் ஒரு முக்கியமான கௌரவ வேடம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சமுத்திரகனியை புக் செய்யலாம். அந்த அளவிற்கு இப்படத்திலும் தன் மேம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி.

கொஞ்ச நேரம் மட்டும் வந்தாலும் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார் கிஷோர். தனது கண்களாலேயே மிரட்டி எடுக்கிறார் அஜய் கோஷ். கயல் ஆனந்தி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை காட்டிலும் ஒரு கேமியோ பண்ணியிருக்கிறார். ஆனால் அவரின் பாத்திரத்திற்கு நச் என பொருந்தியிருக்கிறார்.

அதட்டலாக பேசும் உயர்அதிகாரி வேடத்தில் மிரட்டலாக பொருந்தியுள்ளார் சரவண சுப்பையா. கண்டிப்பாக இப்படத்தில் நடித்தவர்களுக்கு பல விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி.

இப்படத்தில் வித்தியாசமான கதையை கையாண்டுள்ளார்கள், யதார்த்தமாக படமாக்கியுள்ளார்கள் என்பதைத் தாண்டி நம் சமூகத்தின் உண்மை முகத்தை அரிதாரம் பூசி அலங்கரிக்காமல் அப்படியே காட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். குறிப்பாக ஒரு காட்சியில் தமிழ் இஸ்லாமியர் ஒருவர் போலீஸிடம் மாட்டிக்கொள்ளும்போது அவரை எப்படி அந்த காவல்துறை அதிகாரி கேள்வி கேட்கிறார் என்பதில் ஒளிந்துள்ளது நம் சமூகத்தின் கசப்பான உண்மை நிலை.

எதை செய்தாலும் ஒரு லாபம் எதிர்பார்க்கும் உயர்அதிகாரி, உணவளித்துவிட்டு பிரம்பெடுக்கும் ஆந்திர காவல்துறை அதிகாரி, தேனாக பேசி தேளாகக் கொட்டும் கொடூர எஸ்.ஐ என காவல்துறையை பற்றி நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல உண்மைகளை கையாண்ட வெற்றிமாறனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஒரு உண்மை சம்பவத்தையோ ஒரு நாவலையோ தழுவி எடுக்கும்பொழுது பல சவால்களை சந்திக்க நேரிட்டிருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி, தான் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதை இயக்குனர் நிரூபித்து விட்டார்.

வெற்றிமாறன் – ஜீ.வி பிரகாஷ் கூட்டணி இப்படத்திலும் கலக்கியுள்ளது. பின்னணியில் இவரின் இசை, கதை நகர பெரிதும் உதவியுள்ளது.

நம்மையே திரைக்குள் எடுத்து செல்கிறது ராம லிங்கத்தின் ஒளிப்பதிவு, அதிலும் பல சிங்கிள் ஷாட் காட்சிகளை இவர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. படத்தொகுப்பாளர் கிஷோரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என மீண்டும் இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து பல நல்ல படங்களை தயாரித்து வரும் தனுஷ் இதுபோன்ற பல படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

‘விசாரணை’ – பலமற்ற, குரலற்ற அப்பாவிகளின் சத்தியமான கதறல்! ஒவ்வொருவரும் அவசியம் பார்த்தேயாக வேண்டிய படம்!