‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் தனுஷூக்கு ஜோடி கௌதமி மகள் சுப்புலட்சுமி?

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லா பட்டதாரி’. வேலையில்லா பட்டதாரிகளின் வலியையும், வலிமையையும் எடுத்துக்காட்டிய இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தது.

படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட இருப்பதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். தமிழ், தெலுங்கு ஆகிய  இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ‘வேலையில்லா பட்டதாரி-2‘ படத்தை ரஜினிகாந்தின் இளைய மகளும், தனுஷின் மைத்துனியுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அனிருத், ஷான் ரோல்டன் இருவரும் இசையமைக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகி யார் என்பதை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், தனுஷூக்கு ஜோடியாக நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிப்பார் என கூறப்படுகிறது.

கௌதமியின் மகள் சுப்புலட்சுமிக்கு தன் தாயைப் போல, கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனை போல, ‘ஷமிதாப்’ இந்தி படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த இளைய மகள் அக்ஷரா ஹாசன் போல, தானும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. இதற்காகவே அவர் நடனம் முறையாக கற்றுத் தேர்ந்து தயாராகி இருக்கிறாராம்.