தமிழை அவமதித்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனுக்கு தலைவர்கள் கண்டனம்!

சங்கித்துவவாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா சர்மாவின் தோப்பனார் ஹரிஹர சர்மா எழுதிய ‘தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல்’ வெளியீட்டு விழாவின்போது, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடபட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரன் மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் திமிராக உட்கார்ந்திருந்தார். விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் விஜயேந்திரன் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

தமிழை அவமதித்த விஜயேந்திரனுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது கண்டிக்கத்தக்கது. ஆளுநருக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது தமிழ்த்தாயை அவமானப்படுத்தியதாக கருதுகிறேன். நடந்த தவறை மறைப்பதற்காக தியானத்தில் இருந்தார் என தந்திரமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன்:

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் வேண்டும் என்றே அவமரியாதை செய்ததாக நான் கருதவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நின்றிருக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அளிக்கும் மரியாதை, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தரப்பட வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தேசியகீதம் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார். தள்ளாத வயதிலும் கடவுள் மறுப்பாளரான பெரியார் பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று அவை நாகரிகத்தை காப்பாற்றினார். நடந்த தவறுக்கு சங்கர மடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பதுதான் மரபும் மரியாதையும் ஆகும். இதிலிருந்து யாருக்கும் விலக்களிக்க முடியாது. நடந்த நிகழ்வுக்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழையும் தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். கடவுள் மறுப்பாளரான பெரியார் கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்றிருக்கிறார். நடந்த தவறுக்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.

கவிஞர் வைரமுத்து:

தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை.

(விசிக தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமுஎகச தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்)