“என் திரையுலக பயணம் கடுமையானது; ஆனால் சுவாரஸ்யமானது!” – விஜய் ஆண்டனி

நல்ல கதையும், அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதனை நன்கு உணர்ந்து, தீவிரமாக கடைபிடிப்பவர் விஜய் ஆண்டனி.

ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும் மட்டும் இல்லாமல், அவர் தனது ‘அண்ணாதுரை’ படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார்.

தனது சினிமா பயணத்தை சிறுகச் சிறுக அழகாக  செதுக்கி வெற்றியை சுவைத்துக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தனது அசுர தன்னம்பிக்கையாலும், கடும் உழைப்பினாலும் இந்த இடத்தை அடைந்திருப்பவர் அவர். அவரது ‘அண்ணாதுரை’ பெரிய எதிர்பார்ப்புடன்  வெளி வந்துள்ளது..

இப்படம் குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், ” இந்த தலைப்பு இப்படத்திற்கு கிடைத்ததில் எனக்கு மிகவும் பெருமை. கதை தான் என்றுமே  கதாநாயகன் என்பதை உறுதியாக நம்புபவன் நான். இயக்குனர் ஸ்ரீனிவாசன் இப்படத்தின் கதையை என்னிடம் கூறியபொழுது, மிகவும் பிடித்துப்போய் இதில் நடிக்க உடனே சம்மதித்தேன். இப்பட கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.

இப்படம் மூலம் தாய் வீட்டிற்கு திரும்பிய உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆரம்பத்தில் நான் இசையமைப்பாளர் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு முதன்முதலில் என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு தந்தது ராதிகா மேடம் தான். ‘அண்ணாதுரை’ படத்தை அவர் இணைந்து தயாரித்துள்ளதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நிறைய நல்ல உள்ளங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களாலும், ஊக்கத்தினாலும் தான் இந்த ஒரு நல்ல நிலையை பிடித்துள்ளேன். எனது இந்த திரையுலக பயணம் கடுமையாக இருந்தாலும், சுவாரஸ்யமானதாகவே உள்ளது.

முதன்முறையாக இப்படத்தில் நான் வெவ்வேறு மூன்று பணிகள் செய்து இருக்கிறேன். இசை அமைப்பாளர், கதாநாயகன் தவிர தற்போது படத்தொகுப்பாளராகக் கூட இதில் பணிபுரிந்து இருக்கிறேன். என்னுடைய இந்த உழைப்புக்கு நிச்சயம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

‘அண்ணாதுரை’ முழுக்க, முழுக்க ஒரு குடும்ப கதை. நான் அண்ணன் தம்பி என்று இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்து இருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கடுமையான உழைப்பை தந்து இருக்கிறார்கள்:” என்றார் விஜய் ஆண்டனி.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘அண்ணாதுரை’ படத்தை ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்போரேஷன்’ நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ‘R ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

நடிகர்கள் ராதா ரவி, காலி வெங்கட், நளினிகாந்த், ஜிவெல் மேரி மற்றும் ரிந்து ரவி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தில்ராஜின் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனியின் இசை மற்றும் படத்தொகுப்பில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில் , கல்யாணின் நடன இயக்கத்தில் , கவிதா மற்றும் சரசார்ங்கனின் ஆடை வடிவமைப்பில், அருண் பாரதியின் பாடல் வரிகளில் ‘அண்ணாதுரை’ உருவாகியுள்ளது.