ராமனையும், ‘பிரியாணி திருடர்’களையும் வம்புக்கு இழுக்கிறதா ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர்?

விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகும் இப்படத்தில் காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது.

அந்த டீசரில், “புருஷோத்தமா, ராவணன் சீதையை தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வச்சிருந்தானா…! அவனை நாம் அரக்கன்னு சொல்றோமா…! அதே ராமன் அவளை காப்பாத்தி கொண்டுபோய் சந்தேகத் தீயில் போட்டு எரிச்சானா…! அவனை நாம் கடவுள்னு சொல்றோமா…! ராமன் கெட்டவனா? ராவணன் கெட்டவனா?” என விஜய் சேதுபதி கேட்கும் கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது. ராமனை கடவுளாகக் கொண்டாடும் இந்துத்துவவாதிகளைப் பார்த்து தமிழக பகுத்தறிவாளர்கள் நீண்ட காலமாக கேட்கும் கேள்வி தான் அது.

அது மட்டுமல்ல, டீசர் முடியும்போது, “ஆம்லெட் திருடனுக வந்துட்டானுக… ஆம்லெட் திருடனுக வந்துட்டானுக… எல்லாரும் அலட்டா இருங்க… அலட்டா இருங்க…” என்று எச்சரிக்கும் ஓர் ஆண் குரல் பதட்டத்துடன் ஓங்கி ஒலிக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்துத்துவ கட்சி ஒன்றை சேர்ந்தவர்களை “பிரியாணி திருடர்கள்” என சமூக வலைத்தள பதிவர்கள் முத்திரை குத்தியிருப்பதை நினைவூட்டுவதாக இது இருக்கிறது.

எனில், இது இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான அரசியல் படமாக இருக்குமோ…?

கேட்டால், “இது காமெடி படம்; அரசியல் படம் அல்ல” என்கிறார் இதன் இயக்குனர் ஆறுமுககுமார்.

காமெடி படத்தில் ஏன் ராமனுக்கு எதிரான பகுத்தறிவு கேள்வி? ‘பிரியாணி திருடர்’களுக்கு எதிரான மறைமுக எச்சரிக்கை…?

ஒண்ணுமே புரியல உலகத்திலே…

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது…!