உதிரிப்பூ உதிர்ந்தது: மகேந்திரன் மறைந்தார்

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத,தரமான, சிறந்த திரைப்படங்களைப் படைத்தளித்த பிரபல இயக்குநர் மகேந்திரன், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79

1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை கொடுக்கும் கை’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 2006-ம் ஆண்டு வெளியான ‘சாசனம்’ என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த்சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

முன்னதாக, ‘சபாஷ் தம்பி’, ‘நிறைகுடம்’, ‘கங்கா’, ‘திருடி’ உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ‘தங்கப்பதக்கம்’ பட்த்துக்கு இவர் எழுதிய வசன்ஙகள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவை.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘நிமிர்’, ‘Mr. சந்திரமெளலி’, ‘சீதக்காதி’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு சிறு நீரக கோளாறு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2) அதிகாலை காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணியளவில் அவரது உடல் நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பலரும் தங்களுடைய இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.