”கடவுளைக்கூட ஏமாத்திடலாம்; ஆனா நம்ம ஏ.ஆர்.ரஹ்மானை…?”: ‘இரவின் நிழல்’ இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேச்சு!

சினிமா என்னும் கலை வடிவத்தில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த வித்தியாசமான முயற்சியாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ’இரவின் நிழல்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் கலைப்புலி எஸ் தாணு படத்தை வெளியிடுகிறார்.

‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசை பயண கொண்டாட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், சரத்குமார், ராதிகா மற்றும் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

7

இதில் பேசிய பார்த்திபன், “ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள். இருந்தபோதிலும் பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இருந்தாலும் இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார்.

எனக்கு சினிமா எடுக்குறதுக்கு காசு இல்ல. ஆனால் வித்தியாசமா ஏதாவது செய்யணும்னுதான் சிங்கிள் ஷாட் படம் எடுத்தேன். அதுக்கு எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் தேவைப்பட்டது. அந்த சப்போர்ட்தான் A R ரஹ்மான். கடவுளக் கூட அபிஷேகம் பண்ணி ஏமாத்திடலாம். ஆனா நம்ம ரஹ்மான ஏமாத்த முடியாது” என பேசி விழாவை கலகலப்பாக்கினார்

அபிஷேக் பச்சன் பேசும்போது, “பார்த்திபன் இயக்கத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அவர் மிகச் சிறந்த படைப்பாளி” என பாராட்டினார்.

ஏ.ஆர் ரகுமான் பேசும்பொழுது, “பார்த்திபன் 20 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் ஒரு கதை கூறினார். ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு பிறகும் பல கதைகளை கூறினார். ஆனால் ‘இரவின் நிழல்’ படத்தின் கதை சொல்லி முடிப்பதற்குள்ளே இணைந்து பணியாற்றலாம் என கூறினேன். இது ஒரு லட்சிய (Ambitious Project) திரைப்படம்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இரவின் நிழல் படத்தின் பாடல்களை அபிஷேக் பச்சன் வெளியிட்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ’இரவின் நிழல்’ படத்தில் இடம்பெறும் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் மேடையில் வாசித்தார். அதைத்தவிர ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்தை கொண்டாடும் விதத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்வேதா மேனன், ஜேம்ஸ் வசந்தன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட பலர் அவரின் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர்.

Read previous post:
0a1c
நொடிப் பொழுது ஆச்சரியங்கள் மட்டுமே சினிமா அல்ல!

இரு பாத்திரங்களுக்காக எழுதப்பட்ட கதையில் மூன்றாவது பாத்திரமாக கமல் நடித்திருக்கிறார். பகத் பாசிலும் விஜய் சேதுபதியும்தான் பிரதானப் பாத்திரங்கள். பகத் பாசிலின் கதை கொஞ்சம் சுவாரஸ்யம். அவரின்

Close