இந்தியாவின் தலைசிறந்த நவரச நடிகர் ஓம் பூரி இயற்கை எய்தினார்

இந்தியாவின் தலைசிறந்த நவரச நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஓம் பூரி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.

1970 – 80களில், இந்தியாவில் மாற்று சினிமா வளருவதற்கு தனது யதார்த்தமான நடிப்பால் உரமிட்ட ஓம் பூரி, தேசிய விருது, பத்ம பூஷண் விருது உள்பட ஏராளமான விருதுகள் வென்றவர்.

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் பூரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

ஹரியாணா மாவட்டத்தில் பிறந்தவர் ஓம் பூரி. 1976ம் ஆண்டு ‘காஷிராம் கோட்வால்’ என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் பூரி, நஷ்ரூதின் ஷா, ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் போன்ற நடிகர் – நடிகைகளோடு மாற்று திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

1980 ஆண்டு வெளியான ‘ஆக்ரோஷ்’ படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ஆம் ஆண்டு உருவான ‘காந்தி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான ‘My Son the Fanatic’, ‘East is East’, ‘The Parole officer’ உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து ‘City of Joy’, ‘The Ghost and the Darkness’ போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ஓம் பூரி. இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.

அவருடைய மறைவு இந்திய திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று பலரும் தங்களுடைய இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.