வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ – விமர்சனம்

“அட போங்கப்பா! சிரிச்சு சிரிச்சு வ்யிறெல்லாம் புண்ணாப் போச்சு! முடியலே” என்று சந்தோஷமாய சொல்லத் தகுந்த படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

ரோபோ ஷங்கர் எம்.எல்.ஏவாக தன் ஊரில் இலவச திருமணம் செய்து வைக்கிறார். இதில் ஒருவர் மட்டும் ஓடி போக, மானம் போகக் கூடாது என்று சூரியை வலுக்கட்டாயமாக புஷ்பா என்பவருக்கு நாடக கல்யாணம் செய்து வைக்கின்றனர். இதனால், சூரிக்கு அடுத்த சில மாதங்களில் தன் மாமன் மகளுடன் நடக்கவிருந்த திருமணம் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி மீது கொண்ட காதலால் அவருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது அப்பாவிடம் ரூ.10 லட்சம் பணம் வாங்கி ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கிறார்.

ரோபோ ஷங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அப்போது ரோபோ ஷங்கரை அமைச்சர் அழைத்து, ரூ.500 கோடி ஒரு ரகரிய இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா ரோபோ ஷங்கரை துரத்துகிறார்.

ரோபோ ஷங்கர் ஒரு பெரிய விபத்தில் சிக்கி, பழைய விஷயங்களை மறந்து 10 வயதுக்கு திரும்புகிறார்.

இதன்பின் புஷ்பா திருமணம் நாடகம் தான் என சூரி நிரூபித்தாரா? அந்த ரூ.10 லட்சம் பணத்தை நிக்கி கல்ராணியிடம் விஷ்ணு திருப்பிக் கொடுத்து தன் காதலில் வெற்றி பெற்றாரா? அந்த ரூ.500 கோடியை ரவிமரியா கண்டுப்பிடித்தாரா? இவை அனைத்திற்கும் மேல் ரோபோ ஷங்கருக்கு பழைய நினைவு திரும்ப வந்ததா? என்பதை வயிறு வலிக்க சிரிக்க வைத்து கூறியிருக்கிறார் எழில்.

படத்தில் இவர் நன்றாக நடித்தார், அவர் நன்றாக நடித்தார் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. அனைவருமே கிடைத்த கேப்பில் சிக்ஸரை கிரவுண்டிற்கு வெளியில் அடித்துள்ளார்கள். விஷ்ணு முதன்முறையாக கமர்ஷியல் ஹீரோவாக களம் இறங்கி கொஞ்சம் தடுமாறினாலும், நம்பிக்கையான கூட்டணியால் கரை சேர்ந்து விட்டார். நிக்கி கல்ராணி சண்டையெல்லாம் போடுகிறார், டார்லிங் படத்திலேயே இதை பார்த்தது தான்.

ஹீரோ, ஹீரோயின் என தங்கள் பகுதியை இவர்கள் சிறப்பாக செய்தாலும், படத்தில் காமெடி கதாபாத்திரங்களாக களம் இறங்கிய சூரி, ரோபோ ஷங்கர், ரவிமரியா அவரின் அடியாட்கள் என அனைவரும் அதிரிபுதிரி செய்து விட்டனர்.

சூரியை ஆண்டிப்பட்டி முதல் ஆந்திரா வரை “புஷ்பா புருஷன் நீ தானா” என்று கேட்கும் இடத்தில் சிரிப்பு சரவெடி தான். சூரியின் புஷ்பா காமெடி செம்மையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, கலக்கிவிட்டார்.

ரோபோ ஷங்கருக்கு இந்த படம் ஒரு மைல் கல் என்று கூறலாம். அதிலும் 10 வயதுக்கு திரும்பிய பிறகு இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. எல்லாத்தையும் விட கிளைமேக்ஸில் இவர் வில்லன் கும்பலிடம் கதை சொல்வார் பாருங்கள் தமிழ் சினிமா 75 வருட காலத்தில் டாப் 5 காமெடியில் இதுவும் இடம்பிடிக்கும் என்று கூறலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரிப்பு சத்தம் கேட்கிறது.

ரவி மரியா தேசிங்குராஜா படத்தில் பார்த்ததை விட பல மடங்கு சிரிக்க வைக்கிறார். சுவாமிநாதன் சில நிமிடம் வந்தாலும் கலக்கிவிட்டு செல்கிறார்.

ஆனால், படத்தை சிரிக்க வைக்க மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் லாஜிக் பந்தாடுகிறது. இருந்தாலும் காமெடி கண்ணை மறைத்துவிடுகிறது.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ – சிரிப்புக்காரன்!