”தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற மோடியின் கனவு ஒரு காலமும் நிறைவேறாது!” – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பின்னர் சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.

ஆதிக்க சக்திகள், சங்பரிவார் சக்திகள் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழகத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் கனவு ஒரு போதும் நிறைவேறாது.

பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு இந்தியா. நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

திராவிட இயக்க சக்திகள் தமிழ் உணர்வு கொண்டவர்கள். வீறு கொண்டு எழுந்து திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்க வேண்டும். திராவிட ஆட்சிக்கு அரணாக இருப்பது மட்டுமல்லாமல் இந்துத்துவாவை முறியடிக்க வேண்டும்.

திராவிட இயக்க சக்திகளின் உணர்வுகளால் தான் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் கால் எடுத்து வைக்க முடியவில்லை. தமிழகத்தில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க.வினர் தினந்தோறும் அறிக்கை, பேட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர்.திராவிட மாடல் ஆட்சி என்பது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை மறந்து விட்டார்கள்.

பிரதமர் சாதுரியமானவர், மகா கெட்டிக்காரர், தமிழகத்திற்கு வந்தால் திருவள்ளுவரை, பாரதியாரைப் பற்றி பேசுகிறார். வடக்கே சென்றால் இந்தியில் பேசுகிறார்.இந்தியையும், இந்துத்துவா சக்திகளையும் நிலைநாட்ட பிரதமர் செயல்பட்டு வருகிறார். தமிழர்கள் உணர்வு மிக்கவர்கள். தியாகம் செய்த திராவிட இயக்கத்தை கட்டி எழுப்பியவர்கள். அவர்களை ஏமாற்றுவதற்கு திருவள்ளுவர், பாரதியாரை பற்றி சொல்லியும் தமிழ் இலக்கியங்களை பற்றி சொல்லியும் வந்தால் ஏமாந்து விடுவார்கள் என மோடி பகல் கனவு காண்கிறார். மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது. அதற்கு தமிழகம் இடம் தராது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக நாங்கள் அமைத்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு 10 நாட்கள் தூத்துக்குடியில் தங்கி இருந்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறிக்கை தந்துள்ளது. ஸ்டெர்லைட்டில் துப்பாக்கி சூடு என்பது படுகொலை என அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையே சாட்சியமாகும். தற்போது அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு கொடுத்துள்ள அறிக்கையிலும் அந்த சாட்சியங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.