டிராஃபிக் ராமசாமி – விமர்சனம்

இந்த படத்துக்கு ‘டிராஃபிக் ராமசாமி’ என பெயர் வைத்ததை விட, ‘மீன்பாடி வண்டி’ என பெயர் வைத்திருந்தால் கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும். காரணம், கதையில் முக்கியப் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது, ‘சென்னை மாநகர மீன்பாடி வண்டிகளால் ஏற்பட்ட தீமைகளும், அதற்கு நீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தலும்’ என்பது தான்.

சென்னையில் மீன்பாடி வண்டி இடித்ததால் இளைஞன் ஒருவன் உயிரிழக்க நேரிடுகிறது. அந்த இளைஞனுக்காவும், மீன்பாடி வண்டிகளை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவும் ட்ராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போடுகிறார். விளைவாக  எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர் என சகல அதிகாரங்களின் கோபத்துக்கு ஆளாகிறார். இதனால் டிராஃபிக் ராமசாமியின் உயிருக்கும், உறவுகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தாங்கி, அவர் மீன்பாடி வண்டிகளுக்கு எதிராக தடை விதிக்கும் உத்தரவை எப்படி பெற்றார் என்பது மீதிக்கதை.

ஒரிஜினல் ட்ராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எதிர்பார்த்து இப்படத்துக்குப் போனால் ஏமாற்றம் நிச்சயம். அவர் பற்றிய ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற புத்தகத்திலிருந்து கொஞ்சூண்டு எடுத்துக்கொண்டு, அதை வழக்கமான கேடுகெட்ட சினிமா ம்சாலாத்தனங்களுக்குள் போட்டு கரைத்து, எவ்வளவு கேவலமாக முடியுமோ அவ்வளவு கேவலமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்கி. அந்த கேவலங்களை வரிசைப்படுத்தினால் பட்டியல் ரொம்ப நீளும். அந்தக்காலத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் படங்களில் வருவதைப் போல காரசாரமான வசனங்கள் இடம் பெறுவதால் மட்டுமே அது நல்ல திரைப்படம் ஆகிவிடாது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம் என்பதை அரைவேக்காடான இயக்குனர் விக்கி முதலில் தெரிந்துகொள்வது நல்லது.

படத்தில் டிராஃபிக் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வருகிறார். அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரம். சில காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் கொட்டாவி விட வைக்கிறார்.

ரவுடியாக வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது பாத்திரப் படைப்பு, கதை முன்வைக்க முயலும் நீதிபோதனைக்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை.

எஸ்.ஏ.சந்திரசேகரனின் மனைவியாக வரும் ரோகிணிக்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் இல்லை. எனவே நாடகத்தனமாக அழுவது, சிரிப்பது என ஒப்பேற்றியிருக்கிறார்.

சேத்தன், அம்மு ராமச்சந்திரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், மோகன்ராம், வினோத், இமான் அண்ணாச்சி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ், ‘பசி’ சத்யா, குஷ்பு, சீமான், எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கவுரவத் தோற்றங்களில் வந்து, எவ்வித நல்லுணர்வையும் ஏற்படுத்தாமல் ஏமாற்றிவிட்டு போகிறார்கள்.

‘ட்ராஃபிக் ராமசாமி’ – மசாலா ராமசாமி!