டிக் டிக் டிக் – விமர்சனம்

“இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்” என்று ஏகத்துக்கும் விளம்பரம் செய்யப்பட்டதால், என்ன்வோ, ஏதோ என பதட்டத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

கதை என்னவென்றால், பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது ஒரு ராட்சத விண்கல். இது பூமியில் விழுந்தால், தமிழக மக்கள் உட்பட 4 கோடி தென்னிந்தியர்கள் உயிரிழப்பார்கள். இந்த பேராபத்தைத் தடுக்க முயற்சி செய்வது யார் தெரியுமா? விண்வெளி விஞ்ஞானிகள் அல்ல; ராணுவத் தளபதியாம்!

ராணுவத் தளபதி ஜெயபிரகாஷ், தனக்குக் கீழ் பணியாற்றும் நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார். விண்வெளியில் சீனா நிறுவியுள்ள ஆய்வுக்கூடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணையால் மட்டுமே அந்த ராட்சத விண்கல்லைத் தகர்த்து, பேராபத்தை தடுக்க முடியும் என்பது தெரியவருகிறது.

விண்வெளிக்குச் சென்று சீன ஏவுகணையைத் திருடுவதற்கு திறமையான திருடன் தேவைப்படுகிறான். அப்படிப்பட்ட திறமையான திருடனாக, சிறையில் இருக்கும் ஜெயம் ரவி தேர்வு செய்யப்படுகிறார். இப்படியாக ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜூணன் ஆகியோர் அடங்கிய குழு விண்வெளி பயணம் மேற்கொள்கிறது.

பயணத்தின் இடையே எரிபொருள் தீர்ந்துபோவது, விண்கலம்  வழி மாறி நிலாவுக்குப் போய்விடுவது, சீன விண்வெளி வீரர்களுடன் சண்டை என ஏகப்பட்ட பிரச்சனையை சந்திக்கிறது இக்குழு. இது போதாதென்று, இக்குழுவினரை விண்வெளிக்கு அனுப்பிய ராணுவத் தளபதி ஜெயபிரகாஷ் திடீரென வில்லனாக மாறி, ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்துக்கொண்டு, “திருடப்படும் சீன ஏவுகணையை என்னிடம் கொடுத்தால் தான் உன் மகன் உயிரோடு கிடைப்பான்” என்று ஜெயம் ரவியை மிரட்டுகிறார்.

ஜெயம் ரவி சீன ஏவுகணையைத் திருடினாரா? அதை பயன்படுத்தி ராட்சத எரிகல்லைத் தகர்த்து 4 கோடி மக்களை காப்பாற்றினாரா? ராணுவத் தளபதியின் பிடியிலிருந்து மகனை மீட்டாரா? என்பது மீதிக்கதை.

விண்வெளியை மையமாகக் கொண்டு, ஓர் அறிவியல் புனைவுப் படம் கொடுக்க ஆசைப்பட்டதற்காக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனைப் பாராட்டலாம். ஆனால், அறிவியல் அறிவோ, விண்வெளி அரசியல் அறிவோ, நேர்த்தியாக கதை பின்னும் ஆற்றலோ இல்லாததால் அவரது ஆசை நிறைவேறவில்லை. காதல், டூயட் ஆகிய மசாலாத்தனங்களைத் தவிர்த்த இயக்குனர், விண்வெளியில் “பெட்ரோல் பங்க் எங்கே இருக்கு?” என கேட்பது போன்ற மொக்கை காமெடிகளைத் தவிர்க்காதது பெரும் குறை. மேலும், ‘சீன போஃபியா’வுக்காக இயக்குனர் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

ஜெயம் ரவி கதாபாத்திரம் உணர்ந்து, முகத்தை உர்ரென்று வைத்து நடித்திருக்கிறார். அவரை விட அவரது மகனாக வரும் அவருடைய நிஜ மகன் ஆரவ் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் படம் முழுக்க வருகிறார். விண்வெளி பயணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் வழக்கமான நடிப்பைக் குறையில்லாமல் கொடுத்திருக்கிறார். ரித்திகா சீனிவாஸ், பாலாஜி வேணுகோபால், வின்சென்ட் அசோகன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். சிரிப்புக் காட்டுவதற்காக திணிக்கப்பட்ட அர்ஜூணன், ரமேஷ் திலக் ஆகியோரை தவிர்த்திருக்கலாம்.

வெங்கடேஷ் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. இமானின் 100-வது படம் இது. பின்னணி இசையிலும், குறும்பா டிக் டிக் டிக் பாடலிலும் அதற்கான உழைப்பு ஓங்கி ஒலிக்கிறது.

படக்கதையில் உள்ள அபத்தங்களும், லாஜிக் மீறல்களும் எங்களுக்கு ஒருபொருட்டே அல்ல என்று நினைக்கும் பார்வையாளர்கள், இப்படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகளை கண்டு களிக்கலாம்!