உடோபியன் கற்பனைகள் சாத்தியம் தான்!

உடோப்பியா (Utopia) எனும் ஆங்கில சொல்லுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட, துன்பங்களே இல்லாத கற்பனையான உலகம் என்று அர்த்தம். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்பதால் பொதுவாக நடக்கவே முடியாத நம்பிக்கைகளை Utopian என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட கற்பனைகள் சாத்தியம்தான் என்று வாதிடுகிறார் டச்சு வரலாற்று அறிஞர் ரட்கர் பெர்க்மேன். அவரது Utopia for Realists எனும் புத்தகத்தில் தனது வாதங்களை அறிவியல்-பூர்வ ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணிகளில் முக்கியமானது: இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நடக்கவே நடக்காது – இதெல்லாம் உடோப்பியா என்று ஒதுக்கப்பட்ட பல விஷயங்கள் இன்று நம்மிடையே சகஜமாக புழக்கத்தில் உள்ளன என்று சொல்கிறார்.

அவற்றில் சில:

– பென்ஷன்

– பெண் கல்வி

– மண முறிவு

– இலவச மருத்துவம்

– வார விடுமுறை

என்று பட்டியல் போகிறது. ஏன், ஜனநாயகம் கூட மானுடப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக 17ம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்ட போது ‘இதெல்லாம் நடைமுறையில் வேலைக்காகாது பாஸ்!’ என்று ஒதுக்கித் தள்ளி இருக்கிறார்கள். என்று மேற்கோள்கள் காட்டுகிறார். ஆனால் இன்றைக்கு ஜனநாயகம் இல்லாத நாடுகள்தான் அதிசயமாகவும் விதிவிலக்குகளாகவும் பார்க்கப்படுகிறது.

அதே போல இன்றைக்கு நடைமுறைக்கு ஒவ்வாதவை என்று பார்க்கப்படும் பல விஷயங்கள் வருங்காலத்தில் சாத்தியப்படப் போகிறது என்கிறார். அந்தப் பட்டியலில் அவர் குறிப்பிடும் முக்கிய விஷயம் Universal Basic Income. அதாவது அனைவருக்கும் குறைந்த பட்ச வருமான உத்திரவாதம். இதை சொல்லும் போதே பலரும் கசப்புடன் அதனை அணுகுகிறார்கள். ஆனால் அதுதான் நாளை அது நிதர்சனமாகப் போகிறது என்று உற்சாகத்துடன் பேசுகிறார். அதற்கான முனைப்புகளை பல்வேறு உலக நாடுகள் முன்னெடுத்திருக்கின்றன. இந்த குறைந்தபட்ச வருமான உத்திரவாதம் குறுகிய அளவில் அமுல் படுத்தப்பட்ட நாடுகளில் விரைவான வறுமை ஒழிப்புக்கு வழி வகுத்திருக்கிறது, அச்சமூகங்களில் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார்.

பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கும் தமிழ் நாடும் இப்படிப்பட்ட முனைப்புகளை எடுத்திருப்பது இந்திய அதிசயங்களில் ஒன்று. மகளிர் உரிமைத் தொகை அந்த முனைப்புகளில் ஒன்று. ரேஷன் அரிசி ரூபாய்க்கு மூன்று படி வழங்கப்படும் என்று ஆரம்பித்த கனவு, வளர்ந்து வளர்ந்து இன்று இலவசமாகவே 20 கிலோ வழங்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறது. நடைமுறை சாத்தியமே இல்லை எனும் கனவுகளை நிறைவேற்றியே தீருவேன் எனும் பிடிவாதத் தலைவர்கள்தான் சமூக மாற்றத்துக்கு வித்திடுகிறார்கள். அந்த நோக்கில் பெண்களுக்கு உரிமைத் தொகை என்று வழங்கும் திட்டம் முக்கியமானது என்று கருதுகிறேன். விளிம்பு நிலையில் வாழும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இதனால் பயன் பெறப் போகிறார்கள். ரேஷன், சத்துணவு என்று பல்வேறு திட்டங்களும் சிறிது சிறிதாக துவங்கி இன்று முழுக்கவும் வியாபித்தது. இந்தத் திட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஒரு ஸ்வீகி ஆர்டருக்கே ஆயிரம் ரூபாய் செலவிடும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் வீரியம் புரிய வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாயிரம் ரூபாய்க்கு முறைவாசல் செய்யும் பெண்களுக்கு கண்டிப்பாக புரியும்.

பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து தேசத்துக்கே முன்னுதாரணமாக விளங்கும் மாநிலம் தமிழ் நாடு. அந்த வழியில் அடுத்த மைல்கல்தான் இந்த உரிமைத் தொகை. திட்டம் மாபெரும் வெற்றியடையவும் மேலும் விரிவுபடுத்தப்படவும் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டு அரசுக்கு நன்றியும் அன்பும்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்