தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்புகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். தமிழக அரசின் சுகாதார செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல ஆவணங்களையும் ராமமோகன ராவின் லேப்டாப், அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வருமான வரி சோதனைக்குள்ளான ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

0a1b