‘ஜோசப்’ என்ற பெயர் அவர்களை ஏன் அப்படி அச்சுறுத்துகிறது?

மெர்சல் படம் இன்னும் பார்க்கவில்லை. கதையும் கேட்டவரையில் எனக்கு உடன்பாடில்லாத கதையே. நான் விஜய் ரசிகனும் அல்ல. ஆனாலும் இந்த பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவாக நிற்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அவர்கள் விஜய்யை ஜோசப் விஜய்யாக அடையாளப்படுத்த முயன்ற குயுக்திதான் அக்காரணம்.

ஜோசப் என்ற பெயர் அவர்களை ஏன் அப்படி அச்சுறுத்துகிறது?

கிறித்துவம் என்ற மதம் காரணம் அல்ல. பெயரும் காரணம் அல்ல. சாதிகளை பெயர்கள் தாங்குகையில் அவர்களுக்கு பிரச்சினையே இருப்பதில்லை. அது ஆண்டசாதியின் பெயராக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட சாதியின் பெயராக இருந்தாலும் சரி. சாதி என நீங்கள் வந்துவிட்டாலே அவர்கள் போட்ட கோட்டுக்குள்தான் விளையாடப் போகிறீர்கள். ஆனால் ஜோசப் என்ற பெயர் அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஏனென்றால் அந்த பெயர் அவர்களின் வரலாறை இல்லாமல் ஆக்கிய வரலாற்றின் பெயர். அவர்களின் ஏகபோக இருத்தலை அழித்த வரலாறு அது.

‘பாலுங்கறது உங்க பேரு.. தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?’ என்ற வசனம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு ஜோசப் என்பது படிப்பதற்காக நாங்கள் விரும்பி எடுத்துக் கொண்ட பட்டம். படிப்பை ஒட்டுமொத்த குத்தகைக்கு அவர்கள்தானே வைத்திருந்தார்கள்? எங்கள் பெண்களின் மார்புகள் சீலைகள் அணியவே ஜோசப்களின் தாய்கள்தானே வர வேண்டியிருந்தது! நாங்கள் படிக்க எங்கள் கட்டைவிரல்களை அல்லவா கேட்டார்கள்?

அதனால்தான் ஜோசப்பும் விஜய்யும் ஒன்று சேரும்போது அவர்கள் பதைபதைக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையின் அந்த வரலாற்று அடையாளம் அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்களுக்கு சமமாக அமர்கிறோம் என புகைகிறார்கள்.

அதனால்தான் விஜய்யைவிட எனக்கு ஜோசப் விஜய்யை பிடிக்கிறது. உங்கள் மகள்களுக்கு பிடிக்கும் நடனம் இனி விஜய்யின் நடனமாக இருக்கப்போவதில்லை. ஜோசப் விஜய்யின் நடனமாக இருக்கப் போகிறது. ஜோசப் என விஜய்யை உங்கள் மகள் சொல்கையில் நீங்கள் கோபப்படுவீர்கள். உங்கள் கோபத்துக்கு காரணம் கேட்டால் உங்கள் மகளுக்கு உங்களின் இழிவரலாறை சொல்லுங்கள். தெரியட்டும்.

எப்படி சாணிப்பால் கரைத்து ஊற்றினீர்கள் என சொல்லுங்கள். சட்டத்திலும் எங்களுக்கான கற்றல் வாய்ப்பை பறிக்க நீங்கள் முயன்று, அதை எப்படி ஒரு கிழவன் தடுத்தான் என சொல்லுங்கள். உங்களால் ஒடுக்கப்பட்ட ஒருவன் எப்படி கோட் சூட் அணிந்து உங்களிடம் வந்து அமர்ந்தபோது நீங்கள் கூசினீர்கள் என சொல்லுங்கள். அவன் ஏன் புத்த மதத்தை நாடினான் என்றும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ளட்டும்.

ஆதலால், விஜய் எங்களுக்கு ஜோசப் விஜய்தான். உங்களின் ஒடுக்குமுறை வரலாறு இனி திரும்பாது. கஷ்டம்தான். நான்கைந்து முறை நன்றாக நாக்கை வழித்தாவது, மழித்தாவது சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். அவர் இனி ஜோசப் விஜய்!

RAJASANGEETHAN JOHN

Read previous post:
t1
தமிழகத்தை உலுக்கிய 2 நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் படம் – ‘தொட்ரா’!

ஜே.எஸ்.அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப் படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளரான மதுராஜ் எழுதி, இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை

Close