தமிழக அரசின் திரைப்பட கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ – மாணவிகள் இன்று (மே 10ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.

இங்கு ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு (எடிட்டிங்), அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் 2017-18-ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலைத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவ-மாணவிகள் இப்படிப்புகளில் சேரலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்தில் மே 10ஆம் தேதி (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள 3 திரைப்படக் கல்லூரிகளில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே கல்வி நிறுவனம் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.