10 மாதங்களுக்கு பிறகு ஜூன் 3ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி, 1957-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். கடந்த 60 ஆண்டுகளில் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் என்ற வரலாற்றுப் பெருமை அவருக்கு உண்டு. அவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததின் 60-ம் ஆண்டு வைர விழாவை திமுக சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடுவர். இந்த ஆண்டு பிறந்த நாளுடன் சேர்த்து கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி 10 மாதங்களுக்குப் பிறகு தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.