“15 நாள் அவகாசம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்!” -மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ”கடந்த பல நாட்களாக தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இத்தகைய நிலையிலிருந்து தமிழகத்தை காப்பாற்றிட, தமிழக ஆளுநர் உடனடியாக ஒரு நிலையான ஆட்சி தமிழகத்தில் அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

ஆளுநரை நேரடியாக சந்தித்து இதனை வலியுறுத்தியும் இருந்தோம். அதனைத் தொடர்ந்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூடி, இதே கோரிக்கையை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி மீண்டும் அதனை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

இந்தநிலையில் ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். காலம் கடந்து அவர் இந்த முடிவை எடுத்திருந்தாலும், உள்ளபடியே வரவேற்கக்கூடியது. ஆனால், 15 நாட்கள் கெடு விதித்து இருக்கிறார். இது மிகப் பெரிய கால அவகாசமாக உள்ளது. எதற்காக இந்த 15 நாட்கள் கால அவகாசம் என்பது புரியவில்லை.

ஏற்கெனவே இரு பக்கங்களிலும் குதிரை பேரங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போது 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருப்பதால், சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை காட்ட மிகப் பெரிய அளவிலான குதிரை பேரங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இந்த 15 நாட்களில் நிச்சயமாக ஏற்படும்.

எனவே, அப்படி நடைபெறாத வகையில் ஆளுநர் கண்காணித்து, அதற்கு ஏற்ற வகையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சியில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.