தமிழக சட்டப் பேரவை தேர்தல்: வாக்குப் பதிவு ஏப்ரல்-6; வாக்கு எண்ணிக்கை மே-2

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது தமிழகத்தில் மே 24-ம் தேதியுடன் ஆட்சி முடிவடைகிறது.

இதனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று தேர்தல் நடக்கிறது. மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தேர்தல் குறித்த அறிவிப்பு வருமாறு:

வேட்பு மனு தாக்கல் தேதி: மார்ச் 10

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22

வாக்குப்பதிவு: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை: மே 2

தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே உடன் இருக்கலாம் , வேட்புமனுவை இதுவரை நேரில் மட்டுமே தாக்கல் செய்து வந்த நிலையில் ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுனில் அரோரா அறிவித்தார்.

தமிழத்தின் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இதனிடையே, தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக  அமுல்படுத்தப்படும். தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் வாக்களர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். கரோனா நோய் வராமல் தடுக்கும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்க சமூக இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்கப்படும்.

1950 என்ற எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்கள் 24 மணி நேரம் அளிக்கலாம். அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.