‘தொடரி’ படவிழாவில் புகழாரம்: கூச்சத்தில் நெளிந்த தனுஷ்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தனுஷ் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் “அடடா…” பாடல் ஆகியவற்றை இசை வெளியீட்டு விழாவில் முதலில் திரையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அஞ்சனா.

முதலில் பேசிய தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “பல படங்களில் நடித்திருந்தாலும், ‘தொடரி’ படத்தை தனது முதல் படம் போன்று நினைத்து தனுஷ் உழைத்திருக்கிறார். இப்படத்தின் ரயில் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

“ரயிலில் தொங்கிக்கொண்டே சண்டையிடுவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார் தனுஷ். அதனைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். அவர் மட்டுமின்றி சண்டை பயிற்சியாளர்கள் அனைவருமே நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறோம். இப்படத்தின் இறுதிக் காட்சிகளுக்காக தயாரிப்பாளர் நிறைய செலவு செய்திருக்கிறார். 8 கேமராக்கள் வைத்து பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்தார் சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சிவா.

“தனுஷிடம் எனக்கு ஒரே ஒரு கேள்வி: எப்படி தம்பி… ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறாய்?” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் இயக்குநர் மனோபாலா.

தனுஷ், பிரபுசாலமன் ஆகியோரிடம் “இப்படத்தில் இருந்து ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை உபயோகிக்கும்படி கோரிக்கை விடுத்தார் இமான் அண்ணாச்சி.

‘தொடரி’ ட்ரெய்லரில் தனுஷைப் பார்த்து, “உன் மூஞ்ச்சியைப் பார்க்க பிடிக்கல” என்று வசனம் பேசிய ஹரிஷ் உத்தமனை பேச அழைத்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர், “என் தலைவரைப் பார்த்து அப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று குரல் எழுப்பினார்.

படவா கோபி பேசும்போது, “என்னுடைய மகன் உங்களுடைய தீவிர ரசிகன். அவனுக்கு வாழ்க்கையில் சிஏ ஆக வேண்டும்; உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும்” என்றார். உடனே தனுஷ் அவருடைய பையனை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

“நாங்கள் 100 பாடல்கள் மூலம் எட்டுவதை, தனுஷ் ஒரே பாடல் மூலமாக எட்டிவிடுவார்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் பாடகர் கானா பாலா.

“ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவருடைய கலவை தான் தனுஷ். புகைப்படங்களில் கூட அவருடைய நடிப்பைக் காண முடிகிறது” என்றார் சின்னி ஜெயந்த்.

‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தரின் பேச்சு எப்படி இருந்ததோ, அதேபோல இந்த விழாவில் ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு இருந்தது. அவருடைய பேச்சில் ‘இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்’ என்று பலமுறை குறிப்பிட்டார்.

“படப்பிடிப்பில் கேரவானிலிருந்து இறங்கியவுடன் தனுஷ், ரயிலில் பணிபுரியும் பையனைப் போல் நடிக்க ஆரம்பித்துவிட்டார். காமெடி பண்ணுவதற்கு எனக்கு நிறைய இடங்கள் கொடுத்திருக்கிறார்” என்றார் கருணாகரன்.

தன்னுடைய வித்தியாசமான தோற்றத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன். அவருடைய பேச்சில் தனுஷ் குறித்து, “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்று குறிப்பிட்டார். மேலும், பிரபுசாலமனை தனக்கு ஆரம்பத்தில் இருந்து தெரியும், அவருடைய உழைப்பு மிகவும் பெரியது என்று தெரிவித்து பிரபுசாலமனை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

ஆர்.வி.உதயகுமார் தன்னுடைய பேச்சில், “எதார்த்தமான நடிகர் தனுஷ். அவரை பல இளைஞர்கள் பின்தொடர்கிறார்கள். ரஜினியைவிட நன்றாக சண்டையிடவும், கமலைவிட நன்றாக நடிக்கவும் தெரிந்தவர் தனுஷ்” என்று தெரிவித்தார்.

“கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்தவர் தனுஷ்” என்று அவருடைய படங்களின் வசனங்களைப் பேசி காண்பித்தார் இயக்குனர் வசந்தபாலன்

“மேனகா, ரம்பா,ஊர்வசி ஆகியோரை மிக்சியில் அடித்தபோது வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் என்னுடைய முதலாளி தனுஷ்” என்று குறிப்பிட்டார் இயக்குநர் பார்த்திபன்.

“தனுஷின் ‘தொடரி’ வியாபாரம் ரூ.50 கோடியை தாண்டும்” என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு.

“ஒரிசாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்டபோது, நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் தங்குவதற்கு ஹோட்டல்கள் எதுவுமில்லை. அங்கு, கேரவானிலேயே தங்கி 4 நாட்கள் நடித்துக் கொடுத்தார் தனுஷ்” என்றார் இயக்குநர் பிரபுசாலமன்.

தனுஷ் பேசுகையில், “பிரபுசாலமன் என்னை சந்தித்தபோது, “எப்போது சார் தேதிகள் வேண்டும்” என்று தான் கேட்டேன். தேதிகள் சொன்னவுடன் நேரடியாக படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன்.

4 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு ஒரு நாள் கேரவானில் தான் முழுக்கதையையும் கேட்டேன். நான் கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டபோது இருந்த நம்பிக்கை, கதையைக் கேட்டவுடன் இன்னும் அதிகமானது. டப்பிங் பேசியபோது படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது இன்னும் என்னுடைய நம்பிக்கை அதிகமானது.

இங்கு பேசிய அனைவருமே நான் ரொம்ப ரிஸ்க் எடுத்ததாக குறிப்பிட்டார்கள். உண்மையில் நான் இந்தப் படத்துக்கு எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. என்னை மிகவும் அருமையாக பார்த்துக் கொண்டார் பிரபுசாலமன் சார். எனக்கு விபத்து ஒன்றில் கை முறிவு ஏற்பட்ட போதிலிருந்தே எனக்கு உயரத்தில் இருக்கும்போது தலை சுற்றும். இப்படம் முழுக்கவே ரயில் மீது என்றவுடன் கொஞ்சம் பயந்தேன். படப்பிடிப்புக்கு சென்றவுடன் தான் இதனை பிரபுசாலமன் சாரிடம் சொன்னேன்.

ஒவ்வொரு காட்சியிலும் உயரத்தில் இருக்கும்போது எல்லாம் எனக்கு முன்பாக ரயிலின் மீது ஏறி என்ன பண்ண வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுவார் பிரபுசாலமன் சார். அதற்குப் பிறகு தான் என்னை ஏற வைப்பார். அந்தளவுக்கு இந்த படக்குழு என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக்கொண்டது. சண்டைக்காட்சிகளில் நான் எடுத்த ரிஸ்க்கை எல்லாம் விட, சண்டை பயிற்சியாளர்கள் அதிகமாக ரிஸ்க் எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு முன்பு நான் பண்ணியது எல்லாம் ஒன்றுமே இல்லை.

மேலும், இப்படத்தில் என்னைவிட முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். என்னைவிட அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ரசிகர்கள் அனைவருமே பெருமைப்படும் அளவுக்கு நான் வளர்த்து உள்ளேன் என்பதில் எனக்கு சந்தோஷம். அதேபோல நீங்கள் என்னை பெருமைப்படுத்தும் அளவுக்கு வளர வேண்டும். முதலில் உங்களது குடும்பத்தை கவனியுங்கள். உங்களது தாய், தந்தை, மனைவி, அண்ணன் உள்ளிட்ட அனைவரும் தான் இறுதிவரை உங்களுடன் கூடவே வருவார்கள். உங்களது வாழ்க்கையின் இடையே வருபவர்கள் எல்லாம் வந்து சென்றுவிடுவார்கள். குடும்பம் மட்டுமே நிரந்தரம்.

இங்கு இசை வெளியீட்டு விழாவில் என்னைப் பற்றி பலரும் மிகவும் பெருமையாக பேசினார்கள். என் தகுதிக்கு மீறி புகழ்ந்தார்கள். அவர்கள் அன்புக்கு நன்றி. ஆனால் கூச்சமாக இருந்தது” என்று நெளிந்தார் தனுஷ்.