எஸ்விஆர் பற்றிய ஆவணப்படம்: தடையை மீறி வெளியிடப்பட்டது!

தமிழகத்தின் முக்கியமான மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரை குறித்த ஆவணப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களும், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் கடும் விமர்சனத்தை அரசு மீது வைத்துள்ளனர். ‘தமிழகத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவதாக’ குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து சந்திர மோகன் முகநூல் பதிவு:

“எஸ்விஆர்” என பிரபலமாக தமிழில் அறியப்படும், 75 வயதைக் கடந்தும் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டும்கூட, மார்க்சியத்தின் பன்முக பரிமாணத்தையும், உலகளாவிய மார்க்சிய அறிஞர்கள் பற்றியும், பெரியார் & அம்பேத்கர் பற்றியும், இந்துத்துவா அபாயம் பற்றியும், ஆழமான ஆய்வுகளை தமிழில் வழங்கிய மார்க்சிய அறிஞர், எஸ்.வி.ராஜதுரை ஆவார்.

அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை ‘தடம்’ ஆசிரியர் குழு சார்பில் தயாரித்து வெளியிடும் நிகழ்ச்சியை, தோழர்.குறிஞ்சி இன்று (4.6.2016) மாலை 5.30 மணியளவில், மேற்கு மாம்பலம், சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது.

காரணங்கள் :
1)சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும்.

2)சினிமாடோகிராபி ஆக்ட் 1952 க்கு கீழ் சான்றிதழ் வாங்க வேண்டும்.

3)தணிக்கை துறை /Censor board அனுமதி வேண்டும்.

பகல் 3 மணிக்கு அறிவித்து, 4மணிக்குள் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமாம்.

இடம் கண்ணம்மா பேட்டைக்கு மாற்றப்பட்டது. அங்கு தோழர் நல்லக்கண்ணு வெளியிட, தோழர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார். ஆவணப்படம் திரையிடப்பட்டது.

பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், படிப்பாளிகள், இயக்கச் செயல்பாட்டாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டனர்.

ஏன் இந்த தடை?

மார்க்சியமும், அவரது படைப்புகளும், ஆட்சியாளர்களை அச்சுறுத்துகிறதா?

இந்துத்துவா எதிர்ப்பு நிலை பீதியூட்டுகிறதா?

இடதுசாரி படிப்பாளர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றுபடுவதை ஜெயா அரசாங்கம் விரும்பவில்லையா ?

கருத்து தளத்தில் பாசிசத்தின் காலடிச் சத்தம் கேட்கிறது.

தோழர்கள் தயாராக வேண்டும்!”