“ஆபாச படம் என்றால் நதியா நடிக்க முன்வந்திருப்பாரா?”: கொந்தளிக்கிறார் இயக்குனர்!

தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பேய் மற்றும் அமானுஷ்ய பயமுறுத்தல்களோடு, கிரைமும் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை மலையாள படவுலகைச் சேர்ந்த துளசிதாஸ் இயக்கி உள்ளார். கே.மணிகண்டன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் கவர்ச்சி மற்றும் ஆபாச காட்சிகள், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஓரினச்சேர்க்கை காட்சிகள் ஆகியவை இருந்ததாகவும், இதை பார்த்த தணிக்கைக் குழு சான்றிதழ் தர முடியாது என்று மறுத்துவிட்டதாகவும், பின்னர், தணிக்கைக் குழு ஆட்சேபித்த ஆபாசக் காட்சிகள் வெட்டி நீக்கப்பட்டதை அடுத்து, இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் தமிழ் திரையுலகில் ஒரு தகவல் உலா வந்தது. அது சில ஊடகங்களிலும் செய்தி ஆனது.

இதனால் அவசர அவசரமாக செய்தியாளர்களை அழைத்துப் பேசிய இப்படத்தின் இயக்குனர் துளசிதாஸ், “நான் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறேன். சிறந்த இயக்குனருக்கான கேரள அரசின் விருதும் வாங்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை ‘ஆபாசப்பட இயக்குனர்’ போல தகவல் பரப்பப்படுவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

நதியா எவ்வளவு பெரிய நடிகை என்பதும், அவர் எப்படிப்பட்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். எனது ‘திரைக்கு வராத கதை’ ஆபாசப்படமாக இருந்தால், அதில் நதியா நடிக்க முன்வந்திருப்பாரா?

தணிக்கைக் குழு இந்தப் படத்தில் இருந்த இரண்டு காட்சிகளை மட்டுமே நீக்கியது. ஊசி போடுகிற காட்சி, அந்த ஊசிமருந்தின் பெயர் தெரிகிற காட்சி ஆகிய இரண்டு காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

இந்த படத்தில் ஒரு பிரேம்கூட ஆபாசமாக இருக்காது. சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இது இருக்கும்” என்றார் இயக்குனர் துளசிதாஸ்.